“நியமன எம்.எல்.ஏ-க்கள் சட்டப்பேரவைக்குள் நுழையக் கூடாது” புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் அதிரடி

மத்திய அரசால் நியமிக்கப்பட்ட மூன்று பா.ஜ.க நியமன எம்.எல்.ஏ-க்களும் புதுச்சேரி சட்டப்பேரவைக்குள் நுழைவதற்குத் தடை விதித்து சபாநாயகர் வைத்திலிங்கம் உத்தரவிட்டிருப்பது அந்த மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி

புதுச்சேரி சட்டப்பேரவைக்கு மத்திய அரசால் நியமிக்கப்பட்ட 3 பா.ஜ.க எம்.எல்.ஏ-க்களின் நியமனம் செல்லும் எனச் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதையடுத்து இன்று நடக்கவுள்ள பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்கப்போவதாகப் பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் வெ.வைத்திலிங்கம் சார்பில் நியமன எம்.எல்.ஏ-க்கள் வி.சாமிநாதன், கே.ஜி.சங்கர், எஸ்.செல்வகணபதி ஆகியோருக்கு நேற்று இரவு ஓர் உத்தரவு அனுப்பப்பட்டிருக்கிறது. அதில், “புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ-க்களின் நியமனம் செல்லும் என்றும், அவர்கள் பேரவையில் தங்களது இடத்தில் அமரலாம் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் மார்ச் 22-ம் தேதி வெளியிட்ட தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேநேரத்தில் 12.11.2017 அன்று நான் வெளியிட்ட உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்து செய்வதற்கு முன்பு எனது கருத்தையும் கேட்டிருக்க வேண்டும். இந்த உத்தரவில் இயற்கையான நீதி பின்பற்றப்பட்டதாகத் தெரியவில்லை. இந்த வழக்கில் எனது கருத்தைக் கேட்கவும் இல்லை, என்னை பிரதிவாதியாகச் சேர்க்கவும் இல்லை. சென்னை உயர் நீதிமன்றம் எனது கருத்தைக் கேட்காமல் இந்தத் தீர்ப்பை வெளியிட்டதால் இந்தத் தீர்ப்பு பலகீனமாகவும் அரசியல் சாசன தெளிவு இல்லாமலும் இருக்கிறது. இத்தகைய நிலையில், சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பை சட்ட வல்லுநர்களுடன் கவனமாக ஆய்வு செய்து எனது தீர்ப்பை விரைவில் வெளியிடுவேன். அதுவரை 12.11.2017-ல் நான் வெளியிட்ட உத்தரவு அப்படியே அமலில் இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார். புதுச்சேரி பேரவைத் தலைவருக்காக, சட்டப்பேரவை செயலர் வின்சென்ட் ராயர் கையெழுத்திட்ட இந்த நகல் மூன்று நியமன எம்.எல்.ஏ-க்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பா.ஜ.க நியமன எம்.எல்.ஏ-க்கள் மூவரும் சட்டப்பேரவைக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பது உறுதியாகியுள்ளது.

புதுச்சேரி

இன்று காலை 9.30 மணிக்கு புதுச்சேரி சட்டப்பேரவை, துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உரையுடன் தொடங்கவிருப்பதைத் தொடர்ந்து சட்டப்பேரவை வளாகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!