`ஒரு பக்கம் தர்ணா; மறுபக்கம் முக்காடு' - பா.ஜ.க, அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களால் பரபரத்த புதுச்சேரி சட்டப்பேரவை வளாகம்

மத்திய அரசால் நியமிக்கப்பட்ட மூன்று பா.ஜ.க எம்.எல்.ஏ-க்களும் சட்டப்பேரவைக்குள் நுழைய முயற்சி செய்தபோது தடுத்து நிறுத்தப்பட்டதால் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் எம்.எல்.ஏ சங்கர் மயங்கிவிழுந்தார். உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பாஜக

புதுச்சேரி சட்டப்பேரவைக்கு மத்திய அரசால் நியமிக்கப்பட்ட 3 பா.ஜ.க எம்.எல்.ஏ-க்களின் நியமனம் செல்லும் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், “சென்னை உயர் நீதிமன்றம் எனது கருத்தைக் கேட்காமல் இந்தத் தீர்ப்பை வெளியிட்டிருக்கிறது. அதனால் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து எனது அறிவிப்பு வரும்வரை சட்டப்பேரவைக்குள் நியமன எம்.எல்.ஏ-க்களை அனுமதிக்க முடியாது” என்று அதிரடியாகத் தெரிவித்தார். ஆனால், ``சட்டப்பேரவைக்குள் நுழைய தங்களுக்கு யார் அனுமதியும் தேவை இல்லை” என்று நியமன எம்.எல்.ஏ-க்கள் அறிவித்ததால், துணை நிலை ஆளுநரின் வாகனத்தைத் தவிர, முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்களின் வாகனங்களைப் பேரவைக்குள் நுழையத் தடை விதித்தார் சபாநாயகர் வைத்திலிங்கம். இதையடுத்து, முதல்வர் மற்றும் அமைச்சர்கள் நடந்தே உள்ளே சென்றனர். தொடர்ந்து இன்று தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக நியமன எம்.எல்.ஏ-க்கள் வி.சாமிநாதன், கே.ஜி.சங்கர், எஸ்.செல்வகணபதி ஆகியோர் சட்டப்பேரவைக்கு வந்தனர். ஆனால், பேரவைக் காவலர்கள் அவர்களை உள்ளே நுழையவிடாமல் தடுத்தனர்.

புதுச்சேரி

அப்போது, அவர்களிடம் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு நகலைக்காட்டிய பா.ஜ.க-வினர் அங்கேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களைக் குண்டுக்கட்டாகத் தூக்கி அப்புறப்படுத்த முயற்சி செய்த போலீஸுக்கும் நியமன எம்.எல்.ஏ-க்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதற்கிடையே சபாநாயகர் வைத்திலிங்கம், முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் பாதுகாப்பாகச் சட்டப்பேரவைக்குள் அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது தரையில் அமர்ந்த நியமன எம்.எல்.ஏ-க்கள் சபாநாயகருக்கு எதிரான பதாகைகளை ஏந்திக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதையடுத்து, சட்டப்பேரவைக்குள் வந்த துணைநிலை ஆளுநர் கிரண்பேடியிடம் தங்களை உள்ளே அனுமதிக்கும்படி கேட்க முயற்சி செய்தனர் நியமன எம்.எல்.ஏ-க்கள். ஆனால், காவல்துறை அதற்கு அனுமதிக்கவில்லை. சரியாக 9.30 மணிக்கு துணை நிலை ஆளுநர் கிரண்பேடி உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. அப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்காத முதல்வர் மற்றும் ஆளுநரைக் கண்டித்து அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் அன்பழகன், அசனா, பாஸ்கர் ஆகியோர் தலையில் முக்காடு போட்டுக்கொண்டு வெளிநடப்பு செய்தனர்.

எம்எல்ஏ சங்கர்

தொடர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க சட்டமன்றக் கட்சித்தலைவர் அன்பழகன், “உச்ச நீதிமன்ற உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்தும்  வெளிநடப்பு செய்தோம். காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாகச் சிறப்பு சட்டமன்றத்தைக் கூட்ட வேண்டும் என முதல்வர் மற்றும் துணைநிலை ஆளுநருக்கும் கடிதம் அளித்தோம். இதுவரை அதற்கு நடவடிக்கை எடுக்காத முதல்வர் துணைநிலை ஆளுநரைக் கண்டிக்கிறோம். மக்கள் நலத்திட்டங்கள் பல நிறைவேற்றப்படவில்லை. மாநில உரிமையை நியமன எம்.எல்.ஏ-க்கள் விவகாரத்தில் முதல்வர் நாராயணசாமி விட்டுக்கொடுத்துள்ளார்” என்றார்.

அதிமுக

ஆளுநர் உரை தொடங்கிய நிலையில் சட்டப்பேரவையின் பிரதான வாயில் கதவுகள் பூட்டப்பட்டன. ஆனாலும், நியமன எம்.எல்.ஏ-க்கள் மூவரும் வாயிலிலேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் எம்.எல்.ஏ சங்கர் மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!