கோயில் குத்தகை நிலங்களை விவசாயிகளுக்குச் சொந்தமாக்க வேண்டும்: கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை

k.balakrishnan

தமிழ்நாடு முழுவதும் கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களில் ஏராளமான சிறு குறு விவசாயிகள்  குத்தகை அடிப்படையில் விவசாயம் செய்து வருகிறார்கள். தற்போது இந்த நிலங்கள் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இவற்றைக் குத்தகை விவசாயிகளுக்கு உரிமையாக்க வேண்டும் என மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாயப் பிரிவான தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கூட்டம் திருவாரூரில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்குத் தலைமை வகித்து பேசிய மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ‘கோயில் நிலங்களில் பல ஆண்டு காலமாகக் குடியிருந்து வரும் ஏழை எளிய மக்களுக்குப் பட்டா வழங்க வேண்டும். நீண்டகாலமாகக் கோயில் நிலங்களில் குத்தகை அடிப்படையில் விவசாயம் செய்துவரும் விவசாயிகளுக்கு இந்த நிலங்களைச் சொந்தமாக்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஹைட்ரோ கார்பன், மீத்தேன் உள்ளிட்ட எந்த ஒரு திட்டத்தையும் காவிரி டெல்டாவில் செயல்படுத்தக் கூடாது. காவிரி டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்றார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவராகப் பதவி வகித்து வந்த கே.பாலகிருஷ்ணன், இக்கட்சியின் மாநிலச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதால், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் புதிய தலைவராக வி.சுப்ரமணியன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!