வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (26/03/2018)

கடைசி தொடர்பு:10:55 (27/03/2018)

``திருநங்கைகளுக்குக் கனவு, லட்சியம் இருப்பதைப் புரிந்துகொள்ளுங்கள்" திருநங்கை பிரியா பாபு

திருநங்கை

 

எழுத்தாளர், ஆவணப்பட இயக்குநர், மேடைப் பேச்சாளர் எனப் பன்முகங்கொண்டவர் திருநங்கை பிரியா பாபு. மதுரையில் `டிரான்ஸ்ஜென்டர் ரிசோர்ஸ் சென்டர்' (Transgender Resource Center) என்ற தன்னார்வ அமைப்பை நடத்திவருபவர். திருநங்கைகளின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்கான உதவிகளையும் செய்துவருகிறது இந்த அமைப்பு. இங்குள்ள நூலகம், மாற்றுப்பாலினத்தவர் தொடர்பான இலக்கியங்கள், ஆவணப் படங்கள், புத்தகங்கள், குறும்படங்கள் என வெளியுலகுக்கு அத்தனை பரிட்சயப்படாத ஆவணங்களைச் சுமந்து நிற்கிறது. சமூக ஆர்வலர்கள், குறும்பட இயக்குநர்கள், ஆய்வு மாணவர்கள் எனப் பலரும் இந்த சென்டருக்கு வருகைப் புரிகிறார்கள். ஆராதனாவின் வார்த்தைகள் கொடுத்த மனநிறைவுடன் பேசத் தொடங்குகிறார் பிரியா பாபு.

``திருநங்கைகள் எதிர்கொள்ளும் வாழ்வியல் பிரச்னைகள் அனைத்தையும் கடந்துவந்தவள் நான். அதனாலேயே என்னைப்போல கஷ்டப்படும் திருநங்கைகளுக்கு ஆதரவு அளிக்க ஆசைப்பட்டேன். திருநங்கைகள் என்றாலே பாலியல் தொழில் செய்யறவங்க, பணம் கேட்டு தொந்தரவு செய்றவங்க என மேலோட்டமான எண்ணம் இந்தச் சமுதாயத்தில் இருக்கு. மாற்றுப் பாலினத்தவரை அந்தச் சூழலுக்கு உள்ளாக்குவதே இந்தச் சமூகம்தான். திருநங்கைகளுக்கும் திறமைகள், கனவுகள் இருக்கு. லட்சியங்கள் இருக்கு. அதை இந்தச் சமூகம் புரிந்துகொள்ள வேண்டும். லட்சிய எண்ணமுள்ள திருநங்கைகளுக்கு உதவும் வகையில் தொடங்கப்பட்டதுதான் இந்த அமைப்பு. ஆரம்பத்தில், ஒரு சிறிய நூலகத்துடன் தொடங்கினேன். மாற்றுப் பாலினத்தவர் தொடர்பான இலக்கியங்கள், புதினங்கள், ஆவணப் படங்கள் அத்தனையும் சேகரித்திருக்கேன். மாற்றுப் பாலினத்தவர் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளும் மாணவர்கள், வருடத்துக்கு ஐம்பது பேராவது எங்க சென்டருக்கு வந்து படிக்கிறாங்க. 

திருநங்கை

இன்றைய இளைய தலைமுறைக்குத் திருநங்கைகள் பற்றி நேர்மறையான பார்வை இருக்கு. மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும் சமூக அக்கறையும் வளர்ந்திருக்கு. அவர்களின் ஒத்துழைப்புடன் மக்களிடம் நிறைய விழிப்புஉணர்வை எற்படுத்தறோம். பள்ளி, கல்லூரிகள் மற்றும் கிராமங்களில் விழிப்புஉணர்வு முகாம் நடத்தறோம். தனக்குள்ளே ஏற்படும் மாற்றத்தை வெளியில் சொல்லத் தயங்கும் மாற்றுப் பாலினத்தவரை கண்டறியறோம். நேரில் சொல்லத் தயங்குபவர்கள்கூட போனில் தொடர்புகொண்டு, தங்களுக்குள் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தைப் பகிர்ந்துக்கறாங்க. அவங்களுக்கும் அவங்க குடும்பத்தினருக்கும் கவுன்சிலிங் கொடுத்து உதவுறோம். எங்க அமைப்பின் இன்னோர் அங்கமா, சாரி டிரை கிளீனிங் அண்ட் சாரி ரோலிங் பிசினஸ் யூனிட்டைத் தொடங்கியிருக்கோம். இதன்மூலமா திருநங்கைகளுக்கும் பெண்களுக்கும் இலவசப் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு அளிக்கிறோம். நிறையத் திருநங்கைகள் ஆர்வத்துடன் பயிற்சி எடுத்துட்டு வர்றாங்க. இன்னொரு யூனிட்டும் சீக்கிரமே தொடங்கிடும் நம்பிக்கை உருவாகியிருக்கு" என்கிற பிரியா பாபுவின் புன்னகை புரியவைத்தது... 

உதிர்த்துவிட்டு உலகம் போனாலும் 
எதிர்த்து நின்று போராடும் இனம் 
இந்த மாற்றுப் பாலினம். 
 


டிரெண்டிங் @ விகடன்