வெளியிடப்பட்ட நேரம்: 12:07 (26/03/2018)

கடைசி தொடர்பு:12:07 (26/03/2018)

”தமிழக அளவில் முதலிடம்... விரைவில் சர்வதேசப் பட்டியலிலும்..!” - அழகப்பா பல்கலைகழகத்தின் சாதனை

தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலின் (NAAC) ஆய்வில், அழகப்பா பல்கலைக்கழகம் மாநில அளவில் முதல் இடத்தையும், இந்திய அளவில் இரண்டாவது இடத்தையும் பெற்றிருக்கிறது. இந்த அங்கீகாரத்தின் மூலம் முழு தன்னாட்சி ஆங்கீகாரத்தை பெற்றிருக்கிறது. 

அழகப்பா பல்கலை

மத்திய அரசிடம் பெருமளவில் நிதியுதவி பெறும் மத்திய பல்கலைக்கழகங்கள், நூறாண்டு பழமையான சென்னை பல்கலைக்கழகம், பொறியியல் கல்லூரிகளுக்கு தலைமையிடமாக இருக்கும் அண்ணா பல்கலைக்கழகம் என பல பல்கலைக்கழகங்களைப் பின்னுக்குத் தள்ளி தேசிய அளவில் தரவரிசைப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது அழகப்பா பல்கலைக்கழகம்.

தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலின் உயர்குறியீட்டைப் பெற்று எவ்வாறு தனி தன்னாட்சி நிறுவனமாக மாற்றி அமைக்க முடிந்தது என்பது குறித்து அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சுப்பையாவிடம் பேசினோம். 

அழகப்பா துணைவேந்தர்``கடந்த ஆண்டு அழகப்பா பல்கலைக்கழகத்தின் தரத்தை ஆய்வு செய்வதற்காக, வடமாநிலத்தை சேர்ந்த எட்டு பல்கலைக்கழகத்தின் உயர் அதிகாரிகள் எங்கள் பல்கலைக்கழகத்தில் வந்து இறங்கினர். இவர்கள் ஐந்தாண்டுகளுக்கு முன்பு தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில் குறைகள் என்னென்ன என்பதை கேட்டறிந்து, அந்த குறைகளைப் போக்க என்னென்ன நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள் என்று கேட்டறிந்தனர்.

ஐந்தாண்டுக்கு முன்பு சுட்டிக்காட்டிய குறைகள் அனைத்தும் நிறைகளாக மாற்றி இருப்பதை பார்த்து மனநிறைவடைந்தனர். மற்ற பல்கலைக்கழகங்களில் இருந்து நாங்கள் எந்த வகையில் வேறுபட்டிருக்கிறோம் என்பதையும் விவரித்து அதற்காக சான்றுகளை வழங்கினோம். எங்களின் செயல்பாடுகளை நேரில் அறிந்து எங்களுக்கு உயர்மதிப்பை வழங்கி இருக்கின்றனர். மற்ற பல்கலைக்கழகங்களில் குறைதீர்ப்பு கூட்டங்கள் அவ்வளவாக நடக்காது. ஆனால், எங்கள் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் என அனைவரிடமும் குறைதீர்ப்பு கூட்டங்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறோம். இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்படும் குறைகளை உடனுக்குடன் தீர்க்கப்பட்டு பல்கலைக்கழக வசதிவாய்ப்பாக  மாற்றி அமைத்திருக்கிறோம். 

மாணவர்கள் நூலக வசதியை மேம்படுத்திட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, நூலகங்களை நவீனமயமாக்கி இருக்கிறோம். மாணவர்கள் மற்றவர்களின் துணையின்றி, நூலகத்தில் புத்தகங்கள் பெறுவும், அதனை திருப்பிச் செலுத்தவும் ஆட்டோமேஷன் செய்திருக்கிறோம். இந்த வசதியை ஐந்து வளாகத்திலும் அமைத்துக் கொடுத்திருக்கிறோம். 

பல்கலைக்கழகத்தில் உள்ள 97 வகுப்பறைகளையும் மின்னணு முறையில் நவீன வகுப்பறைகளாக மாற்றி அமைத்திருக்கிறோம். இதன் மூலம் ஆசிரியர் என்ன பாடம் எடுக்கிறார் என்பதை மாணவர்கள் விடுமுறை எடுத்த நாட்களிலும் தெரிந்துகொள்ளலாம். 

பல்கலைக்கழகத்தில் உள்ள பதினைந்து மாணவர் மாணவியர் விடுதிகளிலும் கணினி ஆய்வக வசதியையும், உள் விளையாட்டு அரங்கத்தையும், வெளி விளையாட்டு அரங்கத்தையும் அமைத்திருக்கிறோம். பல்கலைக்கழகத்தில் மாணவிகள் நாப்கின் பெறுவதற்கும், அதனை அழிப்பதற்கும் கருவிகள் பொருத்தி இருக்கிறோம். 

பேராசிரியர்கள் மனத்தாங்கல் இல்லாமல் பணி செய்யும் வகையில் பணி உயர்வையும், ஊதிய உயர்வையும் உடனுக்குடன் வழங்கி வருவதால் மகிழ்ச்சியோடு கற்றுத்தருகிறார்கள். எல்லாப் பல்கலைக்கழகத்திலும் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே பணி உயர்வு குறித்து நடவடிக்கை எடுப்பார்கள். ஆனால் எங்கள் பல்கலைக்கழகத்தில் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பணி உயர்வு குறித்து நடவடிக்கை எடுக்கிறோம். இதைத்தவிர, பல்கலைக்கழக வளாகத்திலேயே ஆசிரியர்களுக்குத் தனியே குடியிருப்பு வசதியை ஏற்படுத்தி இருக்கிறோம். ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் குறைகளும் உடனுக்குடன் தீர்க்கப்பட்டிருக்கின்றன. 

அழகப்பா பல்கலைக்கழகத்துக்கு மத்திய அரசு 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து 15 கோடி ரூபாய் வழங்கியது. இந்த நிதியை முழுமையாகப் பயன்படுத்தி, அதற்கான விவரங்களை முதன்முதலில் சமர்ப்பித்து நற்சான்றைப் பெற்றிருக்கிறோம். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஆராய்ச்சி பணிக்காக பத்து கோடி ரூபாயை வங்கியில் டெபாசிட் செய்திருக்கிறோம். இதற்கு இருந்து கிடைக்கும் வட்டி தொகையில் இருந்து அனைத்துத் துறைகளில் உள்ள ஆராய்ச்சி மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறோம். வெளிநாடுகளுக்கு ஆராய்ச்சி விவாதங்களுக்குச் சென்று ஆசிரியர்களுக்கு மட்டுமல்லாது மாணவர்களுக்கும் நிதி உதவி வழங்குகிறோம். 

ஒரு துறையில் உள்ள உயர்மதிப்புள்ள ஆய்வுக்கருவிகளை மற்ற துறைகள் பயன்படுத்த முடியாது என்பது பொதுவாக இருந்துவந்தது. இந்த நிலையை மாற்றி, அனைத்துத் துறைகளில் உள்ளவர்களும் பயன்படுத்தும் உயர்மதிப்புள்ள ஆய்வுக்கருவிகளை கொண்டு வகையில் மத்திய ஆய்வு மையங்களை ஏற்படுத்தி உயர் ஆய்வுப்பணிக்கு உதவி வருகிறோம். பல்கலைக்கழக மானியக்குழு, 20 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் இருக்கவேண்டும் என்று வைத்திருக்கிறது. நாங்கள் 15 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் வைத்திருக்கிறோம். மேலும், கடந்த ஐந்தாண்டில், பல்கலைக்கழகத்தில் பதினைந்துக்கு மேற்பட்ட புதிய துறைகளை உருவாக்கி இருக்கிறோம். 

மாணவர்களின் எண்ணிக்கை 2,950-யிலிருந்து 5,750 ஆக உயர்ந்திருக்கிறோம். மற்ற பல்கலைக்கழகங்களில் பல துறைகளில் ஒற்றை எண்ணிக்கையில் மட்டுமே மாணவர்கள் இருப்பார்கள். ஆனால், அழகப்பா பல்கலைக்கழகத் துறைகளில் மாணவர்கள் சேர்க்கை 93 சதவிகிதமாக இருக்கிறது" என்று சொன்ன துணைவேந்தர் சிறு இடைவெளி விட்டு அழகப்பா பல்கலைக்கழகம் செய்து வரும் பணிகளை பட்டியலிட்டார்.

``பல்கலைக்கழகத்தில் உள்ள துறைகளில் பொதுமக்களின் பங்களிப்பை ஏற்படுத்த முயற்சி எடுத்து வருகிறோம். பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் போட்டி தேர்வு மையத்தில் படித்து பொதுமக்கள் 50 பேர் அரசு வேலை வாய்ப்பினை பெற்றிருக்கின்றனர். மேலும், பல்கலைக்கழகத்தின் சார்பில் ஏழு கிராமங்களைத் தத்தெடுத்து அந்தக் கிராமங்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தந்திருக்கிறோம். தற்போது உள்ள 39 துறைகளும் 39 கிராமங்களைத் தத்தெடுத்து பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளும் வகையில் செயல்பட்டு வருகிறோம். இதன்மூலம், பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்கள் நேரடியாகச் சமுதாய பணியில் ஈடுபடுவதற்கு வாய்ப்பை உருவாக்கி வருகிறோம்.

அழகப்பா பல்கலைக்கழகம்

தற்போது, எங்கள் பல்கலைக்கழகத்தை சர்வதேச பட்டியல் இடம்பிடிக்கும் வகையில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். இதற்காக, சர்வதேச அளவில் மாணவர்களைச் சேர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். மேலும், வெளிநாட்டு ஆசிரியர்கள் இங்குள்ள மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்கும் வகையில் கான்ஃப்ரன்ஸிங் வசதியை ஏற்படுத்தி இருக்கிறோம். எங்களுடைய பல்கலைக்கழகம் சர்வதேச அளவில் இடம்பிடிக்கும்போது பல்கலைக்கழக மேம்பாட்டுக்காக ஆயிரம் கோடி ரூபாய் வழங்கும். இதற்காக இரவு பகல் பாராமல் உழைத்து வருகிறோம்" என்றார் துணைவேந்தர் சுப்பையா. 

தமிழகத்தில் உள்ள மற்ற பல்கலைக்கழகங்களும் அழகப்பா பல்கலைக்கழகத்தை பின்பற்றி தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் இடம்பிடித்து தமிழகத்தின் உயர்கல்வியை மேம்படுத்திட வேண்டியது அவசியம். 


டிரெண்டிங் @ விகடன்