வெளியிடப்பட்ட நேரம்: 14:45 (26/03/2018)

கடைசி தொடர்பு:17:15 (26/03/2018)

`இவர்தான் உண்மையான சூப்பர் ஸ்டார்' - முதல்வர் முன்பு அதிர்ந்த அமைச்சர் வேலுமணி

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

"இரவு பகல் பாராமல் உழைத்து, ஒரே ஆண்டில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியிருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் தமிழ்நாட்டின் உண்மையான சூப்பர் ஸ்டார்" என்று கோவையில் பேசியுள்ளார், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் சொந்தத் தொகுதியான  தொண்டாமுத்தூரில் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு, 86 ஜோடிகளுக்கு இலவசத் திருமணம் ரூ.130.46 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பவானி கூட்டு குடிநீர் திட்டத்தைக் தொண்டாமுத்தூர் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தல் மற்றும் 215.51 கோடி ரூபாய் மதிப்பில் கோவை ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு (ஒப்பணக்கார வீதி) வரை மேம்பாலம் அமைக்க அடிக்கல் நாட்டுவிழா உள்ளிட்ட விழாக்கள் நடந்தன. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பலர் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.

விழாவில் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, "இந்த ஆட்சி, ஓராண்டு காலம் கடந்ததே பெரிய விஷயம் என்று சில தலைவர்கள் சொல்கிறார்கள். ஆனால், இந்த ஓராண்டில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், வேறு எந்த ஆட்சியிலும் நிறைவேற்றப்படவில்லை. அந்த அளவுக்குத் திட்டங்களைச் செயல்படுத்தியிருக்கிறார்கள். ஈரோட்டில் தி.மு.க மாநாடு நடத்தியிருக்கிறது. கட்சியினரை மட்டும் திரட்டி மாநாடு என்கிறார்கள். ஸ்டாலின் பேசும்போதே பலர் கிளம்பிப்போய்விட்டார்கள். தி.மு.க-வுக்கு பயம் வந்துவிட்டது.

பல ஊர்களில் இந்த ஆட்சியைக் கண்டித்து உண்ணாவிரதம் இருக்கிறார்கள். யார் உண்ணாவிரதம் இருக்கிறார்கள் என்று பார்த்தால் எல்லா இடங்களிலும் ஒரே ஆட்கள்தான் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். உண்ணாவிரதத்துக்கு ஒரே பேக்கேஜ் பேசிக்கொள்கிறார்கள். எப்படியாவது அ.தி.மு.க-வை அழிக்கப்பார்க்கிறார்கள். அது நடக்கவே நடக்காது. அ.தி.மு.க-வில் இருப்பவர்கள் தினகரனைப்போலவோ ஸ்டாலினைப் போலவோ ஒரே குடும்பத்திலிருந்து வந்தவர்கள் அல்ல. அண்ணன் எடப்பாடி பழனிசாமி சாதாரண கிளைச் செயலாளராக இருந்து படிப்படியாக முன்னேறி, இன்று முதலமைச்சராகி இருக்கிறார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அண்ணனும் அப்படி கிராமத்திலிருந்து வளர்ந்து வந்தவர்தான். மற்றவர்களைப்போல குறுக்கு வழியில் வந்தவர்கள் இங்கு இல்லை. முதல்வரும் துணை முதல்வரும் இரவு பகல் பார்க்காமல் வேலைசெய்கிறார்கள். எதிர்க்கட்சியினர், பேருக்கு வேண்டுமானால் விமர்சனம் செய்யலாம்.

இப்போது இரண்டு சூப்பர் ஸ்டார்கள் கிளம்பி வந்திருக்கிறார்கள். அகில இந்திய சூப்பர் ஸ்டார் ஒருவர் இன்னொருவர் தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார். இந்த ரெண்டுபேரும் கட்சியை ஆரம்பித்து ஆட்சியைப் பிடிப்போம் என்கிறார்கள். அவர்கள் திரையில் நடித்துவிட்டு அப்படியே இங்கே வருகிறார்கள். ஆனால், இந்த ஒருவருட காலமாக ஏராளமான திட்டங்களை நிறைவேற்றிய அண்ணன் எடப்பாடி பழனிசாமிதான் உண்மையான சூப்பர் ஸ்டார். துணை முதல்வர் அண்ணன் ஓ.பன்னீர்செல்வமும் அவருக்கு உறுதுணையாக இருக்கிறார். ஜெயலலிதாவின் விழுதுகளாக, முதல்வரும் துணை முதல்வரும் இருக்கும் வரை யாராலும் அ.தி.மு.க-வை வீழ்த்த முடியாது'' என்றார்.