`சொடக்குப் போட்டா ஆட்சி இருக்காதா?' - ஸ்டாலினுக்கு சவால்விட்ட முதல்வர் பழனிசாமி | Edappadi palanisamy challenges M.K.Stalin

வெளியிடப்பட்ட நேரம்: 15:05 (26/03/2018)

கடைசி தொடர்பு:15:05 (26/03/2018)

`சொடக்குப் போட்டா ஆட்சி இருக்காதா?' - ஸ்டாலினுக்கு சவால்விட்ட முதல்வர் பழனிசாமி

முதல்வர் எடப்பாடி பழனிசாமி

"சொடக்குப் போட்டால் இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று ஸ்டாலின் சொல்கிறார். சொடக்கு இல்லை, கடப்பாரையைப் போட்டு நெம்பினாலும் இந்த ஆட்சியை ஒன்றும் செய்ய முடியாது" என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாகப் பேசினார்.

கோவை தொண்டாமுத்தூரில், ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு 86 ஜோடிகளுக்கு இலவச திருமணம், 130.46 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பவானி கூட்டு குடிநீர் திட்டத்தை, தொண்டாமுத்தூர் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தல் மற்றும் 215.51 கோடி ரூபாய் மதிப்பில் கோவை ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு (ஒப்பனைக்கார வீதி) வரை மேம்பாலம் அமைக்க அடிக்கல் நாட்டுவிழா உள்ளிட்ட விழாக்கள் நடந்தன. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பல அமைச்சர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.

விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "யார் யாரோ மதத்தைப் பற்றி பேசுகிறார்கள். இது, மதச்சார்பற்ற அரசு என்பதற்கு இந்தத் திருமண நிகழ்ச்சியே சான்று. இந்து, முஸ்லிம், கிறிஸ்துவர் என்று எந்தப் பாகுபாடும் இல்லாமல், அனைத்து மதத்தைச் சேர்ந்த மணமக்களுக்கும் இங்கே திருமணம் நடந்திருக்கின்றன. எப்போதும் அ.தி.மு.க அரசு மதச்சார்பற்ற அரசாகத்தான் இருந்துள்ளது. இங்கு பிரிவினைக்கு வேலையில்லை. அனைவரும் சமம்தான். ஈரோடு மாநாட்டில், சொடக்குப் போட்டா ஆட்சி இருக்காது என்கிறார் ஸ்டாலின். சொடக்கு இல்லை; கடப்பாரையைப் போட்டு நெம்பினாலும் இந்த ஆட்சியை ஒன்றும் செய்ய முடியாது. உங்கள் கனவெல்லாம் வெறும் கானல் நீர்தான். ஜெயலலிதாவின் அரசை முறியடிக்கச் செய்யப்பட்ட  அத்தனை சதித்திட்டங்களையும் முறியடித்து ஆட்சியைக் காப்பாற்றியிருக்கிறோம். எங்கள் ஒன்றரைக் கோடி தொண்டர்கள் சிப்பாய்களாக இருக்கிறார்கள்; எதுவும் செய்ய முடியாது.

 காவிரி மேலாண்மை வாரியத்தைப் பற்றி பேசுகிறார்கள். கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் மத்திய அரசில் அங்கம் வகித்த தி.மு.க., காவிரி விவகாரத்துக்கு ஒரு துரும்பையும் கிள்ளிப்போடவில்லை. அப்போது அவர்களுடைய எண்ணமெல்லாம் அதிகாரத்தைப் பெறுவதாகத்தான் இருந்ததே ஒழிய, மக்கள் நலன் துளியும் இல்லை.  ஜெயலலிதா ஆட்சியில்தான் சட்டப்போராட்டம் நடத்தி, இறுதித் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட வைத்தார்கள். அ.தி.மு.க-வுக்கு தமிழக மக்களின் நலன்தான் முக்கியம். தமிழகத்தின் உரிமைகளை நிலைநிறுத்துவதற்கு அனைத்து முயற்சிகளையும் அ.தி.மு.க அரசு எடுக்கும்.

கல்விக்கு ஏராளமான உதவிகளை வழங்கியது ஜெயலலிதா அரசுதான். ஏழை எளிய குடும்பத்தில் பிறந்தவர்கள்கூட உயர்கல்வி படிக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார்கள். அதற்கு, ஜெயலலிதா அரசுதான் காரணம். நாங்கள் எவ்வளவோ திட்டங்களைக் கொடுத்திருக்கிறோம். ஆனால், இந்த அரசு எதுவுமே செய்யவில்லை என்று சொல்கிறார்கள். அனைத்தும் பொய். ஏராளனமான திட்டங்கள் இருக்கின்றன. சொல்வதென்றால் மணிக்கணக்கில் சொல்லலாம். காந்திபுரம் பாலம் மக்களுக்குப் பயனில்லாமல் கட்டப்பட்டுள்ளதாகப் பல பத்திரிகைகளில் செய்தி வந்தது. அந்தப் பாலம் மக்களுக்குப் பயனுள்ள வகையில் மாற்றி அமைக்கப்படும். மக்கள் நலனே முக்கியம்'' என்றவர், மணமக்களை வாழ்த்தி அமர்ந்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க