வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (26/03/2018)

கடைசி தொடர்பு:18:40 (26/03/2018)

`பறவைகளைப் பாதுகாக்க ஆலமரக் கன்றுகளை நடுவோம்' - அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவுறுத்தல்

 அமைச்சர் விஜயபாஸ்கர்

"கரூர் மாவட்டம் முழுதும் பறவைகள் வளர உதவியாக அரசமரம், ஆலமரம் உள்ளிட்ட பயன்தரும் மரங்கள் நடப்படும்" என போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியரக பெரும்திட்ட வளாகத்தில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு,            7 லட்சம் மரக்கன்றுகளை நடும் திட்டத்தின் கீழ், 70 மரக்கன்றுகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமையில் நட்டு, திட்டத்தினை தொடங்கிவைத்தார். இந்நிகழ்சியின்போது, பேசிய அமைச்சர்,  "மரங்களே மனித வாழ்விற்கு ஆதாரமாக அமைகிறது. மழைபெறவும், பிராண வாயுவைப் பெறவும், மரங்கள் அவசியம். புவி வெப்பமயமாதலைத் தடுக்கவும், நீண்ட நெடிய இயற்கைப் பாதுகாப்பைப் பெறவும், மரங்கள் அவசியம்.

 இயற்கைக்கு வித்திடும் மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பது ஒவ்வொருவரின் கடமையாகும். திருமண நாள், பிறந்தநாள் உள்ளிட்ட முக்கிய விழா நாள்களில், மரக்கன்றுகளை நட்டு வளர்த்து, எதிர்கால சந்ததியினருக்கு இயற்கையின் அழகை விட்டுச்செல்வோம். கரூர் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் ஆலமரம், அரசமரம் உள்ளிட்ட பயன்தரும் மரங்களை நட்டு பறவைகள் பாதுகாக்கப்பட்டுள்ளது. அதோடு, கரூர் மாவட்டம் முழுவதும் பறவைகள் தங்கி இளைப்பாறவும், வசிக்கவும், அவற்றுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கவும் ஏதுவாக, அரச மரம் மற்றும் ஆலமரக் கன்றுகள் நட்டு வளர்க்கப்படும்" என்றார்.