`இரண்டு கிட்னியும் செயலிழந்துவிட்டது' - மகளைக் காப்பாற்ற உதவிக்கு ஏங்கும் ஏழ்மை பெற்றோர்

''இரண்டு கிட்னியும் செயலிழந்து உயிருக்காகப் போராடிக்கொண்டிருக்கிறாள் என் மகள். தந்தையின் சிறுநீரகமும் செயலிழந்துவிட்டது. சிறுநீரகத்துக்காகப் பதிவு செய்ததில் 1,148 வது நபராக உள்ளார். என்ன நடக்குமோ ஏது நடக்குமோ எனத் தெரியவில்லை'' என்று பெற்ற மகளைக் காப்பாற்றுவதற்காகப் பெற்றோர் தவித்து வருகின்றனர்.

லாவண்யா

பெரம்பலூர் மாவட்டம், கூத்தனூரைச் சேர்ந்த சண்முகம்- கம்சலா தம்பதியின் மகள் லாவண்யா. இவர் பாரதிதாசன் உறுப்பு கல்லூரியில் பி.ஏ முதலாமாண்டு படித்து வருகிறார். முதலில் இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. பின்பு, கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போதே சோர்ந்துபோய் மயங்கி விழுந்துள்ளார். இதைச் சத்துக் குறைவு என்று அலட்சியமாக இருந்திருக்கிறார்கள் அவரின் பெற்றோர்கள். லாவண்யா சிறுநீர் கழித்துக்கொண்டிருக்கும்போதே புரதங்கள் வெளியேறத் தொடங்கியிருக்கிறது. இதைக் கண்டு அதிர்ந்த அவரின் பெற்றோர்கள்  பெரம்பலூர் மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள். அங்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்கவில்லை, லாவண்யாவின் உடல்நிலை சரியாகக் குணம் அடையாததால் திருச்சி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.

அங்கும் உடல்நிலை முன்னேற்றம் அடையாததால், சென்னை, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்துள்ளார்கள். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், லாவண்யாவுக்கு, இரண்டு கிட்னியும் செயலிழந்துவிட்டது என்று சொல்லியிருக்கிறார்கள். யாரேனும் சிறுநீரகம் கொடுத்தால் உங்கள் மகள் பிழைப்பால் என்று சொல்லியிருக்கிறார்கள். சற்றும் யோசிக்காத அவரின் தந்தை சண்முகம். 'நான் வாழ்ந்து முடித்துவிட்டேன்; எனது மகள் உயிர் வாழட்டும்' என்று கூறி தன் சிறுநீரகத்தைக் கொடுத்துள்ளார். லாவண்யாவுக்குத் தந்தையின் சிறுநீரகத்தைப் பொருத்தினார்கள் மருத்துவர்கள். ஆனால், பொருத்திய 7 வது நாளிலேயே அதுவும் செயலிழந்துவிட்டதால், மாற்று சிறுநீரகம் பொருத்தினால் மட்டுமே, லாவண்யா உயிர் வாழ முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. வாரத்துக்கு இருமுறை ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை செய்ய வேண்டும் இல்லையேல் கேள்விக்குறிதான் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

                                         லாவண்யா பெற்றோர்


ஏழ்மை நிலையில், சென்னையில் தங்கி சிகிச்சை பெற முடியாததால், பெரம்பலூர் அரசு மருத்துவமனையில், உள்நோயாளியாகச் சிகிச்சை பெறுகிறார். ''சிறுநீரகம் தானமாகப் பெற பதிவு செய்துள்ளோம். பதிவு மூப்பில் 1,148 வது நபராக இருக்கிறது. இதன்படி பார்த்தால் ஒன்றரை ஆண்டுக்குப் பின்னர்தான் சிறுநீரகம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதற்குள் என்ன ஆகும் என்று தெரியவில்லை. தமிழக அரசு நினைத்தால் என் மகளுக்கு உயிர் கொடுக்க முடியும்'' என்று மகளைக் காப்பாற்றுவதற்காக ஏழைப் பெற்றோர் தவித்து வருகிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!