'தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி'- வைரலாகும் காரைக்கால் கலெக்டரின் பாடல்

கடந்த ஒரு வாரகாலமாக, சமூக வலைதளங்களில் 'தூறல் நின்னு போச்சு' திரைப்படத்தில் வரும் 'தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி' என்ற பாடல் வைரலாகப் பரவிக்கொண்டிருக்கிறது.  காரணம், அந்தப் பாடலின் ஆண் குரலை அட்சர சுத்தமாகப் பாடிப் பின்னியெடுத்திருப்பவர், காரைக்கால் மாவட்ட கலெக்டர் கேசவன் ஐ.ஏ.எஸ்.  

Karaikal Collector

கலெக்டர் கேசவன் பாடகரானது எப்படி? அவரிடமே கேட்டோம். ''தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள சங்கரன்குடியிருப்பு கிராமம்தான் எனக்கு சொந்த ஊர்.  அப்பா ரவீந்திரன், போஸ்ட்மேன்.  அப்பாவுக்கு சினிமா மற்றும் சினிமா பாட்டுகளில் ரொம்ப ஆர்வம்.  எங்கு போனாலும் சினிமா பாட்டுப் புத்தகம் வாங்கிட்டு வந்திடுவாங்க.  சின்ன வயசிலிருந்தே பாட்டு கேட்கிறதும், அதைப் பாடிப் பார்க்கிறதும் எனக்கு ரொம்ப விருப்பம்.  பாட்டுப் புத்தகம் வைத்து பாடிப் பாடியே பள்ளி, கல்லூரிகளில் நிறையப் பரிசுகள் வாங்கியிருக்கேன்.  உத்தரகாண்ட்டிலுள்ள முசோரி ஐ.ஏ.எஸ் அக்காடமியில் பயிற்சியில் இருக்கும்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று கல்ச்சுரல் புரோகிராமில் குரூப்பா கலக்குவோம்.  கவிதாராமன் என்ற ஐ.ஏ.எஸ் ஆபீஸர்கூட, சூப்பரா பரதநாட்டியம் ஆடுவாங்க.  

Karaikal Collector

இங்கே, சப்-கலெக்டராக பணியில் சேர்ந்து, தற்போது கலெக்டரா இருக்கேன்.  வீட்டுல ஃப்ரீயா இருக்கும்போது, ரிலாக்ஸா 'சுமுல்'  ஆப்ல போய் பாடுவேன்.  நூற்றுக்கும் மேல பாடல் பாடியிருக்கிறேன்.  அதுல ஒண்ணு எப்படியோ இங்கு வெளியே தெரிஞ்சிருக்கு. அதனால, புத்தாண்டு விழாவுல பொதுமக்கள் என்னைப் பாடச்சொல்லி கேட்டுக்கிட்டாங்க.  நானும் பாடினேன்.  எல்லோருக்கும் சந்தோஷம். எனக்கு, இளையராஜா சாரோட பாடல்னா ரொம்பப் பிடிக்கும். அவரோட பாடல்களைப் பாடி, பாராட்டைப் பெற்றிருக்கேன். ஆனா, எனக்கு சங்கீத ஞானம் கிடையாது.  அதை முறையாகக் கத்துக்கணும்னு ஆசை இருக்கு.  அதேபோல, தபேலா, மிருதங்கம் போன்ற ஏதாவது ஒரு இசைக்கருவியை வாசிக்கக் கத்துக்கணும்னும் ஆசை.  இதற்கெல்லாம் எப்போ நேரம் கிடைக்குமோ தெரியல'' என்று சிரித்தார்.

அதே நேரத்தில், தன் கடமையில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்.  காரைக்கால் மாவட்டத்திற்குப் பல நல்ல செயல்கள் நடைபெறக் காரணமாகவும் இருக்கிறார்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!