`ஆற்றிலேயே குழிதோண்டி புதைச்சிடுவோம்' - மணல் கடத்தலைத் தடுக்க முயன்றவருக்கு அமைச்சரின் ஆதரவாளர்கள் மிரட்டல்

செய்யாறு ஆற்றில் தினமும் ஆங்காங்கே 50 வண்டிக்கும் மேல மணல் கடத்துறாங்க. எங்க கிராமத்து வழியாதான் மணல் கடத்திட்டுப் போறாங்க. அதை முள் புதரில் கொட்டி வச்சி மொத்தமா லாரியில அள்ளிக்கிட்டுப் போறாங்க. ''ஏன் இப்படி அடியோட சுரண்டி எடுத்துட்டுப் போறீங்க. இதால குடிக்க தண்ணிகூட இல்லாம கஷ்டப்படப்போறோம். இனிமே மணல் எடுக்காதீங்கனு சொன்னபோது, 'தம்பி உனக்கு இது வேண்டாத வேலை. நாங்க லோக்கல் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனுடைய ஆளுங்க; பேசாமப் போய்டுங்கனு மிரட்டினாங்க. அதையும் மீறி நான் அரசு அதிகாரிங்ககிட்ட சொன்னபோது, அது அவங்களுக்குத் தகவல் போய் இருக்கு. உடனே எனக்குப் போன் பண்ணி கொலை மிரட்டல்கள் விடுறாங்க. ஆற்றிலேயே குழிதோண்டி புதைச்சிடுவேன்னு சொல்றாங்க. மணல் கடத்தலை நிறுத்தணும். அதனால்தான், உங்ககிட்ட சொல்றேன். என் பரையும் ஊரையும் போட்டுடாதீங்க சார்’ என்று நம்மிடம் பேசினார். அந்த இளைஞர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த தச்சூர் கிராமத்தின் குறுக்கே ஓடுகிறது செய்யாறு. கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக மணல் கொள்ளை நடந்து வருகிறது. ஆனால், கடந்த 2 வருஷமாதான் அதிக அளவில் நடக்குது. இரவு பகல் என்று எந்த நேரமும் மணல் கடத்துறாங்க. இதற்குக் காரணம் ஆரணி தொகுதியைச் சேர்ந்த அமைச்சர்தான். மணல் கடத்தலுக்குச் சில நல்ல அதிகாரிங்க நடவடிக்கைகள் எடுத்தாலும், நாங்க அமைச்சர் ஆளுங்க எங்க வண்டியப் பிடிச்சா உங்களுக்குப் பிரச்னைகள் வரும்னு மிரட்டுறாங்க. அவங்களும் அமைச்சர் ஆளுங்ககிட்ட எதுக்கு வம்புனு அமைதியா இருக்காங்க. அமைச்சர் தலையீடால மணல் கடத்தலைத் தடுக்க முடியல.

சில வருடங்களுக்கு முன்பு சில மாட்டுவண்டிகளே இருந்தது. ஆனால், இப்போது 30 மாட்டுவண்டிகளாகப் பெருகிடுச்சு. அதுமட்டுமின்றி டிராக்டர் 30 வண்டிக்கும் மேல ஆய்டுச்சு. நாள் ஒன்றுக்கு ஒரு மாட்டுவண்டி சராசரியாக மூன்று லோடு மணல் எடுத்துக்கிட்டுப் போவுது. டிராக்டரில் இரவு நேரத்துல கணக்கே இல்லாம தினமும் மணல் கடத்தப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் குறைஞ்சுப் போச்சு.

இரவு நேரங்களில் தெரு விளக்கை அனைத்துவிட்டு மணல் கொள்ளையில் ஈடுபடுறாங்க. இதனால ஆற்றின் ஓரம் இருக்கிற விவசாய நிலமெல்லாம் தண்ணீர் இன்றி விவசாயம் பாக்க முடியாம முள் காடுகளாக மாறிகிட்டுவருது.

செய்யாற்றில் இருந்துதான் ஆரணி நகராட்சிப் பகுதிகளுக்கு 24 மணி நேரமும் குடிநீர் சென்றுகொண்டு இருந்தது. இப்போது அது பெருமளவில் குறைந்துள்ளது. இன்னும் வறட்சிக் காலங்களில் குடிநீர் பற்றாக்குறை பெரிய பாதிப்பை மக்களிடையே ஏற்படுத்தும். ஒரு சிலரின் சுயநலத்துக்காக ஒட்டுமொத்த மக்களும் பாதிப்பு அடைகின்றனர். நேற்று இரவு மட்டும் ஒரு லாரி, 7 லோடு மணல் கடத்திச் சென்றது. 

வட்டாட்சியர் மூலம் மாட்டு வண்டிகளைக் கைப்பற்றினாலும் இரண்டு தினங்களுக்குள்ளாகப் புதிய மாட்டுவண்டிகளை வாங்கி திரும்பவும் மணல் கொள்ளையில் ஈடுபடுகிறனர். அவர்கள் ஆற்றில் தோண்டிய பள்ளங்கள் ஒரு ஆளையே மறைத்துவிடும் அளவுக்கு உள்ளது. 6 அடுக்கும் மேல் பள்ளம் தோண்டி மணல் அள்ளுகின்றனர். ஆற்றின் அடியில் களிமண் வந்துவிட்டது. டிராக்டர், லாரி போவதற்கும் ஆற்றிலேயே பாதை உருவாக்கிவிட்டனர்.

நீர் ஆதாரங்கள் சீரழிவது குறித்து கவலைப்படாமல் அடியோடு சுரண்டி, அதாவது களிமண் வெளியே தெரியும்வரை மணலை வாரி அள்ளி எடுத்து விடுகிறார்கள். இதனால் நிலத்தடி நீர் பெருமளவிற்கு பாதிப்பு அடைந்துள்ளது. ஆற்றின் குறுக்கே வாகனங்கள் செல்வதற்குப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. அந்தப் பாலத்தின் அடியில் மணல் அள்ளி இப்போது அங்கு மண் அரிப்பு ஏற்பட்டு பாலமே பழுதடையும் நிலையில் உள்ளது. இதற்கெல்லாம் முக்கிய காரணம் ஆரணி பகுதி அறநிலையத்துறை அமைச்சர்தான். அவர் பேரைச் சொல்லி பயமின்றி தில்லாக மணல் அள்ளுகின்றனர். கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கிறனர்' என்றார்.

இதுகுறித்து கேட்க அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனுக்குத் தொடர்பு கொண்டோம். முதலில் போனை எடுத்து, 'நான் மீட்டிங்கில் உள்ளேன் மீட்டிங் முடிந்ததும் நானே அழைக்கிறேன்' என்றவர். பிறகு, நாங்கள் போன் செய்தும் அவர் எடுக்கவில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!