எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் தொடங்கப்படாமல் இருக்க இதுதான் காரணமா?

எய்ம்ஸ்

``தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்குவது தொடர்பாக எந்தவொரு தெளிவான முடிவும் இன்றுவரை மத்திய அரசு எடுக்கவில்லை. மாறாக அதனைத் தட்டிக்கழிக்கும் பணியை மத்திய அரசு செய்துவருகிறது'' என்ற பரவலானக் குற்றச்சாட்டு எழுந்துவருகிறது. மேலும், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்குவதற்கான முயற்சிகள் அனைத்தும் நின்றுவிட்டன. இதனால் அடுத்ததாக எங்கு எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்படும்... என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுந்துள்ளது.

2015-2016 ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், `தமிழகத்தில் ரூ .2,000 கோடி மதிப்பில், சுமார் 200 ஏக்கர் நிலப்பரப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்படும்' என மத்திய அரசு அறிவித்திருந்தது. அதற்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் செங்கல்பட்டு, ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை, மதுரை மாவட்டத்தில் தோப்பூர், தஞ்சாவூர் மாவட்டத்தில் செங்கிப்பட்டி, மற்றும் புதுக்கோட்டை ஆகிய ஐந்து இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. தமிழக அரசு, இந்த இடத்தேர்வு பட்டியலை கடந்த 2014 ம் ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் மத்திய அரசுக்கு அனுப்பிவைத்தது. தேர்வு செய்யப்பட்ட இந்த ஐந்து இடங்களுக்குள் எய்ம்ஸ் மருத்துவமனை எங்கு அமையவேண்டும் என மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டுமென தமிழக அரசு தெரிவித்திருந்தது. ஆனாலும் மத்திய அரசு மருத்துவமனை தொடங்கும் இடம் பற்றியும், மருத்துவமனை பற்றியும் எந்தவொரு தெளிவான பதிலையும் சொல்லவில்லை. இதனைத் தொடர்ந்து மருத்துவமனை இடத்தை 31-12-2017-க்குள் மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என நீதிமன்றம் அறிவித்தது. அதற்கும் மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. இன்றுவரை இந்தப் பிரச்னை தொடர்ந்துவருகிறது.

எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில்தான் தொடங்கப்படவேண்டும். இது தென்மாவட்டங்களை இணைக்கும் பெருநகரம். கன்னியாகுமரி முதல் திருச்சி வரை உள்ள மாவட்டங்கள் இதனால் பயன்பெறும். மேலும், ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து வசதிகளைக் கொண்டதும் மதுரைதான். அதனால், மதுரையில் மருத்துவமனை அமைந்தால்தான் மக்களுக்கு வசதியாக இருக்கும் என அனைத்துத் தரப்பு மக்களும், பல்வேறு கட்சியினரும் குரல்கொடுத்து வந்தனர். எப்படியும் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில்தான் தொடங்கப்படும் என அனைவரும் நினைத்திருந்த வேளையில், `இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் எரிவாயு குழாய் தோப்பூரில் கடக்கிறது. அதனால், எய்ம்ஸ் மருத்துவமனை இங்கு தொடங்கமுடியாது' என மத்தியக் குழு தெரிவித்துள்ளது. இதையடுத்து, `எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கு எவ்விதப் பாதிப்பும் இல்லை' என இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனே' மத்திய அரசுக்கு அறிக்கையைத் தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது. மேலும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, `எய்ம்ஸ் மருத்துவமனையை தஞ்சாவூர் செங்கிப்பட்டியில் 300 ஏக்கர் பரப்பளவில் அமைக்க மத்திய அரசுக்குப் பரிந்துரைத்துள்ளதாக'த் தெரிவித்தார். 

எடப்பாடி பழனிசாமி

இந்நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனை பிரச்னைத் தொடர்பாக `சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்க'த்தின் பொதுச்செயலாளர் ஜி.ஆர். ரவீந்திரநாத்திடம் பேசியபோது, ``இதுவரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்க இடம் தேர்வு செய்யாததுக்குக் காரணம் மத்திய அரசின் 'அரசியல்' தான். ஏற்கெனவே ஐந்து இடங்களைத் தமிழக அரசு சொல்லியுள்ளது. அதில் ஏதாவது ஓர் இடத்தைத் தேர்வு செய்து மக்களுக்குப் பயனுள்ள விதத்தில் இந்நேரம் மருத்துவமனை கட்ட ஏற்பாடு செய்யப்பட்டிருக்க வேண்டும். இந்தத் தேவையில்லாத கால தாமதம் என்பது தமிழகத்தை ஏமாற்ற நினைக்கும் யுக்தி" என்கிறார்.

மதுரையில், எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்படும் என நினைத்துக்கொண்டிருந்த நிலையில், அங்கு `இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்' பெயரைச் சொல்லி திட்டம் நிறுத்தப்பட்டுவிட்டது. உண்மையில் அதுதான் காரணமா? தென்மாவட்டங்கள் அனைத்தும் வசதி வாய்ப்புகளுக்கு மதுரையைத்தான் முதலில் நம்புகிறது. தீவிர சிகிச்சைப்பிரிவு மருத்துவமனைகள் மதுரையில் அதிகமாக உள்ளன. இந்தநிலையில், எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்பட்டால் மக்களுக்குக் குறைந்த செலவில் மருத்துவம் கிடைத்துவிடும். இது அங்குள்ள தனியார் மருத்துவமனைகளைப் பெருமளவு பாதிப்படையச் செய்யும். இந்த அரசியல்தான் எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரைக்குள் வரவிடாமல் தடுத்துவருகிறது என்ற செய்தியும் கசிந்துவருகிறது.

எய்ம்ஸ் மருத்துவமனைக் கட்ட தேர்வு செய்துள்ள இடத்தை மத்திய அரசு இன்னும் எத்தனை வருடங்களுக்குப் பிறகு அறிவிக்க இருக்கிறதோ...?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!