வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (26/03/2018)

கடைசி தொடர்பு:22:30 (26/03/2018)

`சொந்தக் கட்சியினரையே வேட்புமனுத்தாக்கல் செய்யவிடாமல் தடுக்கிறார்!’ சர்ச்சையில் சிக்கும் அமைச்சர் மணிகண்டன்

ராமநாதபுரம் கூட்டுறவுச் சங்க தேர்தலில் சொந்தக் கட்சியினரையே போட்டியிட விடாமல் தடுத்துவிட்டதாக அமைச்சர் மணிகண்டன் மீது ஆளும் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

அமைச்சர் மணிகண்டன் மீது புகார் கூறும் அ.தி.மு.க நகர செயலாளர்

தமிழகம் முழுவதும் கூட்டுறவுச் சங்கங்களுக்கான தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கியது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்களுக்கு இன்று வேட்புமனு பெறப்பட்டது. இதில் ராமநாதபுரம் நகரில் உள்ள க்யூ 115 ராமநாதபுரம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்க இயக்குநர் பதவிகளுக்கான வேட்புமனு இன்று தேர்தல் நடத்தும் அலுவலரால் பெறப்பட்டது.

இதில் அமைச்சர் மணிகண்டன் ஆதரவாளர்கள் மனுத்தாக்கல் செய்தனர். இந்நிலையில் தற்போதைய தலைவரும், ராமநாதபுரம் நகர அ.தி.மு.க செயலாளருமான அங்குச்சாமி உள்ளிட்ட சிலர் வேட்புமனுத்தாக்கல் செய்யச் சென்றனர். ஆனால், இவர்களது வேட்புமனுவை வாங்க தேர்தல் அதிகாரி மறுத்த நிலையில் இருதரப்பினருக்கும் இடையே மோதல் எழுந்தது. இதையடுத்து அங்குச்சாமி தரப்பினரை போலீஸார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.  

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அங்குச்சாமி ''அமைச்சர் மணிகண்டன் தேர்தல் நடத்தும் அதிகாரிகளை கையில் வைத்துக்கொண்டு பால் தொழிலில் ஈடுபடாத தனது ஆதரவாளர்களை இயக்குநர் பதவிகளுக்கு வேட்புமனுத் தாக்கல் செய்ய வைத்துள்ளார். தற்போதைய தலைவராக இருந்து வரும் நான் மனுத்தாக்கல் செய்ய சென்ற போது எனது மனுவை வாங்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர். காரணம் கேட்டால் அமைச்சர் சொன்னவர்களிடம் மட்டும்தன் மனு வாங்குவோம் எனச் சொல்கிறார்கள். அதே நேரத்தில் தினகரன் கட்சிக்காரர்களின் மனுவை வாங்கியுள்ளனர். 

சொந்தக் கட்சிக்காரர்களையே பதவிக்கு வர விடாமல் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அமைச்சர் மணிகண்டனின் செயல் குறித்து கட்சித் தலைமையிடம் புகார் செய்வேன். மேலும், இந்தத் தேர்தலை முறையாக நடத்த கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன்'' என்றார். 
 அமைச்சரின் இந்த நடவடிக்கையினால் ராமநாதபுரம் மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்க தேர்தலில் தொடக்க நாளிலேயே மோதல் எழ தொடங்கிவிட்டது.