`தவணைத் தொகை கட்டியும் டிராக்டரைப் பறிமுதல் செய்துவிட்டனர்!’ - ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயி தற்கொலை முயற்சி

தவணைத் தொகை கட்டாததால், டிராக்டரை தனியார் நிறுவனம் பறிமுதல் செய்துவிட்டதாகக் கூறி, தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயி ஒருவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயி தீக்குளிக்க முயற்சி

தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை அருகில் உள்ள கோவிந்தம்பட்டியைச் சேர்ந்தவர், கனகராஜ். விவசாயியான இவர், நெல்லையில் உள்ள தனியார் டீலரிடம் ஃபைனான்ஸ் முறையில் டிராக்டர் வாங்கியுள்ளார். தவணைத் தொகை செலுத்தவில்லை என்று கூறி, டிராக்டரை நிதி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை பறிமுதல்செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ள நிலையில், இன்று ஆட்சியரிடம் மனு அளிக்க ஆட்சியர் அலுவலகத்திற்கு கனகராஜ் வந்துள்ளார். வரிசையில் நின்று மனுவிற்கு ரசீது பெறும் இடம் அருகில் வந்த கனகராஜ், தான் கொண்டுவந்திருந்த மஞ்சள் நிற பைக்குள் வைத்திருந்த 5 லிட்டர் மண்ணெண்ணெய் கேனை எடுத்து தன் தலையில் ஊற்றி, தீப்பெட்டியை எடுத்து  பற்ற வைக்க முயன்றார். அதற்குள் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் தடுத்து, அவர்மீது தண்ணீரை ஊற்றினர்.

செய்தியாளர்களிடம் பேசிய விவசாயி கனகராஜ், “ நெல்லையைச் சேர்ந்த  தனியார் டீலரிடம் ஃபைனான்ஸ் முறையில் ரூ.12 லட்சம் மதிப்புள்ள டிராக்டரை வாங்கினேன். இதற்காக, முன்பணமாக ரூ 3 லட்சம் கட்டிவிட்டேன். ஆனால், இதற்கான அத்தாட்சியாக ரசீது  உள்ளிட்ட எந்த ஆவணமும் எனக்குத் தரப்படவில்லை. லோன் தொகையைப் பற்றியும் என்னிடம் எதுவும் தெரிவிக்கவில்லை. மாதத் தவணையாக ரூ.45 ஆயிரம் கட்டும்படிச் சொன்னார்கள்.

கடந்த மாதம் வரை தவணைத்தொகையை சரியான தேதியில் கட்டி வந்துள்ளேன். இன்னும் ஒரே ஒரு தவணை மட்டுமே கட்டப்படாமல் பாக்கி உள்ளது. இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (23.03.18) அன்று காலை 10 மணி அளவில், ஃபைனான்ஸ் கம்பெனியினர் என்னிடம் எந்தத் தகவலும் சொல்லாமல், எனக்குத் தெரியாமல் என்னுடைய டிராக்டர் மற்றும் சுழல் கலப்பையையும் பறிமுதல் செய்துள்ளனர். இதனால், எனக்கு ரூ.5 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் மிகுந்த மனமுடைந்ததாலும், தனியார் ஃபைனான்ஸ் கம்பெனிமீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காகவும் தீக்குளிக்க முயன்றேன்” என்றார். ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விவசாயி ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!