வெளியிடப்பட்ட நேரம்: 09:59 (27/03/2018)

கடைசி தொடர்பு:09:59 (27/03/2018)

``ஒண்ணுக்குப் போறதுகூட மரண வேதனைதான்யா!” - ஸ்டெர்லைட் பாதிப்பால் பரிதவிக்கும் பெண்கள் #BanSterlite

ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம்

``ம் பேரு ஈஸ்வரிங்க. குமரெட்டியாபுரம்தான் சொந்தவூரு. இந்த ஊருக்கு வாக்கப்பட்டு வந்து பத்து வருஷம் ஆகுதுங்க. மூணு பொம்பளைப் புள்ளைங்க இருக்குதுங்க. மூத்த பொண்ணைத் தவிர மத்த ரெண்டு பொண்ணுகளும் இருதய நோயால் பாதிக்கப்பட்டிருக்காங்க. ஆஸ்பத்திரி ஆஸ்பத்திரியா அலைஞ்சு திரிஞ்சு வைத்தியம் பண்ணிட்டிருக்கேன். இதுக்கு நடுவுலதான் இந்தப் போராட்டத்திலே கலந்துக்கிறேன். எம் புள்ளைகளையும் எங்க ஊரு சனங்களையும் காப்பாத்த, நியாயம் கிடைக்கிற வரைக்கும் கொதிக்கிற வெயிலுல எரிஞ்சுப்போகவும் தயாரா இருக்கேன். குடிக்கிறதுக்கு நல்ல தண்ணீர் கூட இல்லாம வெயிலுல கெடந்து தொண்டைத் தண்ணீர் வத்த கத்தறோம். யார் காதுக்கும் எங்க குரல் கேட்டபாடில்லே” - வேதனையோடும் கொதிப்போடும் பேசும் ஈஸ்வரி, 43 நாள்களுக்கும் மேலாக தூத்துக்குடியில் நடைபெற்று வரும் ஸ்டெர்லைட் போராட்டத்தில் பங்கெடுத்து வருகிறார். ஈஸ்வரி

``எங்க கிராமத்துல நோய்வாய்ப்படாத சனங்களே கெடையாது தம்பி. பொம்பளைங்களுக்கு மூணு, நாலு மாசத்திலேயே அபார்ஷன் ஆகிடுது. பொறக்குற குழந்தைங்க வளர்ச்சி சரியில்லாம இருக்குதுங்க. பொம்பளைப் புள்ளைங்க நாள் கழிச்சு பெரிய மனுஷி ஆகுறாங்க. போதாததுக்கு மாசா மாசம் வீட்டுக்குத் தூரமும் சரியா வரமாட்டேக்குது. வருஷக் கணக்கா பொறுத்துப் பொறுத்துப் பார்த்தோம். ஓரளவுக்குத் தூரத்துல இருக்கிறப்பவே இவ்ளோ பிரச்னை. இப்போ, விரிவாக்கம்ங்கிற பேருல 50 அடிக்குப் பக்கத்துலயே டெவலப் பண்ணப் போறாங்களாம். அதான், கொதிச்சுப் போயி போராட வந்துட்டோம். 'நெஞ்சுவலின்னாலும் பரவால்லே, நாங்களும் உன்னோடு வர்றோம்'னு எம் புள்ளைங்களும் போராட வந்துடுச்சுங்க தம்பி” குரல் தழுதழுக்கப் பேசுகிறார் ஈஸ்வரி. 

காசியம்மாள்``நான் 16 வருஷமா இந்தக் கிராமத்தில்தான் இருக்கேன். கல்யாணம் பண்ணிட்டு வந்தப்போ ஓரளவுக்கு நல்ல தண்ணியும் காத்தும் இருந்துச்சு. கொஞ்ச நாளிலேயே தண்ணியோட நிறம் மாறுச்சு. சோறு பொங்கினா மஞ்சள் கலரா இருக்கும். தண்ணியைக் குடிக்கும்போதே தொண்டை அடைக்கும். வேற வழி? அதையேதான் குடிப்போம். நாள் போகப் போக என்னவெல்லாமோ பண்ண ஆரம்பிச்சிடுச்சு. வீட்டுக்குத் தூரம் மட்டுமில்லே, ஒண்ணுக்குப் போறதுகூட மரண வலியாத்தான் இருக்கும். சொட்டு சொட்டாத்தான் போகுது. இதையெல்லாம் யாருக்கிட்ட சொல்ல முடியும். குடிக்கிற தண்ணியை ஒரு குடத்துக்கு 10 ரூவா கொடுத்து வாங்குறோம். எனக்கு ஒரு பையனும் ஒரு பொண்ணும் இருக்குதுங்க. பொண்ணு படிக்கிற ஸ்கூலுக்குப் பக்கத்துலதான் அந்த ஆலை இருக்கு. ரெண்டு, மூணு தடவை அவ திடீர் திடீர்னு மயங்கி விழுந்துருக்கா. ஆஸ்பத்திரிக்குப் போனா, நல்ல காத்து கிடைக்காததுனால இப்புடி ஆகுதுன்னு சொல்றாங்க” எனக் குமுறுகிறார் காசியம்மாள். 

மொட்டையம்மாள்``ன் வீட்டுக்காரரு நல்லாத்தாம்ப்பா கொத்து வேலையைப் பாத்துட்டிருந்தார். திடீர்னு ஒருநாள் கை, கால் வௌங்காம படுத்த படுக்கையா ஆகிட்டார். மண்டைக்குக் கிறுக்கு புடிச்சிடுச்சு. மூணு பொம்பளப் புள்ளைகளை கட்டிக்கொடுக்க இருந்தேன். இப்போ அதுங்க படிப்பை நிறுத்திட்டு வேலைக்குப் போக ஆரம்பிச்சிடுச்சுங்க. என் வீட்டுக்குப் பக்கத்துல இருக்கிற முத்துலெட்சுமிக்கும் ரெண்டு கை செயல்படாம போயிடுச்சு. திடீர் திடீர்னு மூச்சுத்திணறி செத்தவங்க ஊருக்குள்ளே நிறைய பேரு” என்கிற மொட்டையம்மாவின் குரலில் வெளிப்படும் துயரத்தை வார்த்தையால் உணர்த்திவிட முடியாது. 

பானுமதி``வீட்டுக்கு வந்த மருமக வயித்துல ஒரு வாரிசைப் பாத்துடணும். எம் மவனின் புள்ளையைத் தூக்கிவெச்சுக் கொண்டாடணும்னு எவ்வளவோ ஆசையா இருந்தேன் கண்ணு. ஆனால், மருமவ மூணுமுறை கர்ப்பம் ஆகியும் கரு தங்கலை. ஆஸ்பத்திரிக்குப் போனா, 'ஸ்டெர்லைட் பக்கத்துல உங்க வீடு இருக்கா? முதல்ல வேற ஊருக்கு மாறுங்க'னு சொல்றாங்க. பரம்பரை பரம்பரையா வாழற ஊரைவிட்டு எங்கே போய் நாங்க பொழைக்கறது? ஒரு ஆலைக்குப் பயந்து ஒட்டுமொத்த சனத்தையும் எப்புடிய்யா விட்டுட்டு போவமுடியும்” என்ற பானுமதி அம்மாவின் ஒவ்வொரு வார்த்தையிலும் கனல். 

கற்பகலெட்சுமி``ன்னையோடு 44-வது நாளா போராடறோம். இங்கே பந்தல் போடறதுக்குகூட உரிமை இல்லைன்னு சொல்லிட்டாங்க. வேப்ப மரத்துக்குக் கீழ உட்கார்ந்து போராடிட்டிருக்கோம். எங்க மண்ணுல நாங்க பந்தல் போட்டு அமைதியான வழியில் போராட உரிமை கிடையாதுன்னு இந்த அரசாங்கம் சொல்றது ரொம்ப கேவலமா இருக்கு. ஆம்பளை, பொம்பளை, குழந்தைகள், கர்ப்பிணிகள், பெரியவங்க என வயசு வித்தியாசம் இல்லாமல் போராடிட்டிருக்கோம். இப்போவரை மூச்சுத்திணறல், கேன்சர், கை கால் வௌங்காமல் போறதுனு சாவு எங்களை துரத்திட்டேதான் இருக்கு. எங்க சனங்களைக் காப்பாத்த தொடர்ந்து உறுதியா போராடுவோம். ஸ்டெர்லைட்டை மூடுற வரை எங்க குரல் ஒலிக்கும்” எனக் கணீர் குரலில் ஆதங்கத்தைப் பதிவுசெய்கிறார் கற்பகலெட்சுமி. 

இன்று தூத்துக்குடியின் குரலாக ஒலிக்கும் இவர்கள் அனைவரின் கோரிக்கையும், தமிழ்க்குடியின் ஒட்டுமொத்த குரலாக ஒலிக்க வேண்டும். அதுவே ஸ்டெர்லைட் ஆலையையும் ஒழிக்கும். 

 


டிரெண்டிங் @ விகடன்