வெளியிடப்பட்ட நேரம்: 03:30 (27/03/2018)

கடைசி தொடர்பு:16:31 (30/06/2018)

தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கான ரூ.1,950 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை! திருமாவளவன் குற்றச்சாட்டு

"மத்திய அரசு தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டிய நிதிகளில் அநேகமான நிதிகள் வெகுவாக குறைத்திருக்கிறது. ஒப்பீட்டளவில் ஆந்திரா,கர்நாடகம்,கேரளா ஆகிய மாநிலங்களைவிட தமிழகத்திற்கு நிதியை குறைவாகவே மத்திய அரசு ஒதுக்குகிறது. குறிப்பாக தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்க வேண்டிய 1950 கோடி ரூபாயை இன்னும் ஒதுக்கவில்லை" என்று குற்றம்சாட்டி பேசியுள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்.     

திருமாவளவன்

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சேர்வைக்காரன்பட்டியில் நடந்த கட்சி பிரமுகரின் இல்ல மணவிழா வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்த திருமாவளவன்,கரூர் மாவட்டத்தில் 4 இடங்களில் கட்சிக் கொடியை ஏற்றும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அப்போது பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், "கூட்டுறவு சங்களுக்கான தேர்தலை 4 கட்டங்களாக நடத்துவதாக தமிழக அரசு சொல்லி இருக்கிறது. முதல்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (மார்ச் 26) நடைபெற்றுள்ளது. கரூரில் அ.தி.மு.கவுக்கும், டி.டி.வி.தினகரன் கட்சி ஆதரவாளர்களுக்கும் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. டி.எஸ்.பி ஜீப் உடைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களை மட்டும் வேட்புமனுத் தாக்கல் செய்ய அனுமதித்த அதிகாரிகள், மாற்றுக் கட்சிகாரர்களின் வேட்புமனுக்களை கிழித்து எறிந்துள்ளனர். இன்னும் பலரிடம்,'அப்ளிகேஷன்கள் இல்லை' என்று துரத்தி அடித்திருக்கிறார்கள். இப்போதே இப்படின்னா, இந்தத் தேர்தல் எப்படி அமைதியாக நடக்கும்?. கூட்டுறவு சங்கத் தேர்தல்களில் ஆளும்கட்சிகளே வெற்றி பெறும் சூழல் இருப்பதால், விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்த தேர்தலை புறக்கணிக்கிறது. கூட்டுறவு சங்க தேர்தலிலும் இடஒதுக்கீடு செய்ய வேண்டும்.

முதலமைச்சர், 'மத்திய அரசோடு இணக்கமாக இருப்பதால்,தமிழகத்திற்கு அதிக நிதிகளை பெற்று வருவோம்' என்று சொல்லி இருக்கார். ஆனால், ஆளுங்கட்சி அமைச்சர் ஒருவரே, 'மத்திய அரசு தமிழகத்திற்கான நிதியைக் குறைத்து வழங்கி வருகிறது' என்று குற்றம்சாட்டியுள்ளார். கர்நாடகம், ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களோடு ஒப்பிட்டால், நமக்கு மத்திய அரசு ஒதுக்கி வரும் நிதி மிகக்குறைவு. அதுவும்,உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டிய 1,950 கோடி ரூபாயை வழங்காமல் இழுத்தடித்து வருகிறது. 'உள்ளாட்சி தேர்தல் நடந்தால்,அந்த நிதியை ஒதுக்குகிறோம்'ன்னு சொல்றாங்க.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் மத்திய அரசு திட்டமிட்டே அல்லது வேண்டுமென்றே காலம் தாழ்த்துகிறது. வரும் 29-ம் தேதி அனைத்துக் கட்சி குழு இதுதொடர்பாக பிரதமர், குடியரசு தலைவரை சந்திக்க முடியாவிட்டாலும் மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து அழுத்தம் கொடுக்க வேண்டும். தமிழக அரசு இந்த விவகாரத்தில் மத்திய அரசிடம் பணிந்து போய்விடக்கூடாது.

நதிநீர் இணைப்பு என்பது கனவுத்திட்டம். அதை யாரும் செயல்படுத்தப் போவதில்லை. தஞ்சையில் ஹைட்ரோ கார்பன் திட்டம், தேனியில் நியூட்ரினோ திட்டம், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் விரிவாக்கத் திட்டம், மேற்கு மாவட்டங்களில் கெயில் குழாய் மூலம் கேஸ் கொண்டு வரும் திட்டம் என்று தமிழகத்தைப் பாலைவனமாக்க மத்திய அரசு திட்டம் போடுது. இந்தத் திட்டங்களை செயல்படுத்தாமல், மத்திய அரசு பின்வாங்கனும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் பா.ஜ.கவை வீழ்த்த மூன்றாவது அணி அமைக்கும் முயற்சி நடக்குது. அந்த முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்" என்று முடித்துக் கொண்டார்.