வெளியிடப்பட்ட நேரம்: 04:00 (27/03/2018)

கடைசி தொடர்பு:04:00 (27/03/2018)

தம்பதி கொலை வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை ஆயுள்! திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பு

திருப்பூர் மாவட்டம் மானூரைச் சேர்ந்த பழனிச்சாமி - வள்ளியம்மாள் தம்பதியினர் கொலை வழக்கில் இரட்டை ஆயுள் தண்டை மற்றும் 15 ஆண்டுகள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

 

 

மானூர் கிராமத்தைச் சேர்ந்த பழனிச்சாமி - வள்ளியம்மாள் ஆகியோருக்கு அப்பகுதியில் சொந்தமாக நிலம் உள்ளது. பழனிச்சாமியின் பக்கத்து தோட்டத்தைச் சேர்ந்தவர்கள் ரகுவரன் மற்றும் மகேஸ்வரன்.  சகோதரர்களான இவ்விருவரும் தங்களின் தோட்டத்துக்குச் செல்வதற்காக பழனிச்சாமியின் நிலத்தை பாதையாக பயன்படுத்தி வந்துள்ளனர். இதற்கு பழனிச்சாமியும் அவரது மனைவியும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கவே, சகோதரர்கள் இருவரும் கடந்த 2010- ஆண்டு பழனிச்சாமியையும், வள்ளியம்மாளையும் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர். பின்னர் யாருக்கும் தெரியாமல் இருவரில் ஒருவரின் சடலத்தையும் கிணற்றில் வீசியும், மற்றொருவரின் சடலத்தை மண்ணுக்குள் புதைத்தும் வைத்தனர்.

இதுதொடர்பான புகாரில் திருப்பூர் காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்தி சகோதரர்கள் இருவரையும் கைது செய்தனர். இந்த கொலை வழக்கு கடந்த சில வருடங்களாக திருப்பூர் இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. ஆனால் வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த காலத்திலேயே கைது செய்யப்பட்ட இருவரில் மகேஸ்வரன் என்பவர் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், இந்த வழக்கில் திருப்பூர் நீதிமன்றம் நேற்று (மார்ச் 26)  தீர்ப்பளித்தது. பழனிச்சாமி மற்றும் அவரது மனைவி வள்ளியம்மாளை கொலை செய்த குற்றத்துக்காக குற்றவாளி ரகுவரனுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், அத்துமீறி நுழைந்தது, ஆவணங்களை மறைத்தல் மற்றும் சடலத்தை யாருக்கும் தெரியாமல் அடக்கம் செய்தல் உள்ளிட்ட குற்றங்களுக்காகத் தலா 5 ஆண்டுகள் வீதம் 15 ஆண்டுகளும், ரூபாய் 6,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அதனைத்தொடர்ந்து ரகுவரனை காவல்துறையினர் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.