`கூட்டுறவு வங்கித் தேர்தலுக்கு விண்ணப்பிக்கும்போதே முறைகேடு!’ - ஆளுங்கட்சியை விளாசும் விவசாயிகள் சங்கம்

கூட்டுறவு சங்கத்தேர்தல் வேட்புமனு தாக்கலின்போதே ஜனநாயக படுகொலை நடைபெறுகிறது என்று  தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. 

கூட்டுறவு வங்கி

தமிழகத்திலுள்ள எழுபதாயிரத்துக்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடக்கவுள்ளது, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆளும் கட்சியினர் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது. இந்தநிலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கப் பொதுச்செயலாளர் சண்முகம் விடுத்துள்ள அறிக்கையில், ''கூட்டுறவு அமைப்புகளுக்கு முதற்கட்ட தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் துவங்கியுள்ளது. மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் போட்டியிட விரும்புபவர்களுக்கு வேட்பு மனுவே தராமல் சொசைட்டிகளுக்கு பூட்டு போட்டு விட்டு அதிகாரிகள் ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகளின் ஆணைப்படி செயல்படுகின்றனர். சில இடங்களில் வேட்புமனுத் தாக்கல் செய்தால் அதற்கான ஒப்புதல் சீட்டு தராமல் போகச் சொல்கின்றனர். ஆளுங்கட்சியினர் மற்றும் அதிகாரிகளின் இந்த அடாவடித்தனமான நடவடிக்கைகளைக் கண்டித்து பல இடங்களில் சாலை மறியல், சொசைட்டிகள் முன் மறியல் என்று மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கூட்டுறவு தேர்தல் ஆணையம், தேர்தலை ஜனநாயகப்பூர்வமாக நடத்திட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். அ.தி.மு.கவினர் மோசடி நடவடிக்கைகள் மூலம் கூட்டுறவு அமைப்புகளை கைப்பற்றும் திட்டத்தைக் கைவிட்டு, நியாயமாக தேர்தல் நடைபெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!