’கூட்டுறவுச் சங்கம் தேர்தலில் கலவரம் செய்யத் திட்டமிட்டுள்ளனர்’ -ஆளும் கட்சியினர் மீது குற்றம்சாட்டும் பாமக | The ruling party are planning to create riot in Co-operative Election, says pmk

வெளியிடப்பட்ட நேரம்: 05:30 (27/03/2018)

கடைசி தொடர்பு:05:30 (27/03/2018)

’கூட்டுறவுச் சங்கம் தேர்தலில் கலவரம் செய்யத் திட்டமிட்டுள்ளனர்’ -ஆளும் கட்சியினர் மீது குற்றம்சாட்டும் பாமக

கூட்டுறவுச் சங்கம்

கூட்டுறவுச் சங்கம் தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்திட வேண்டும். ஆனால் முறைகேடு செய்ய திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வந்திருக்கிறது. அதை தடுத்திட கலெக்டரை சந்தித்து மனு கொடுத்து விட்டுச் செல்வதாக பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைச் செயலாளர் அருள் தெரிவித்தார். இவரோடு கட்சி தொண்டர்களும் வந்திருந்தார்கள்.

மேலும் இதுபற்றி பா.ம.க., மாநில துணைச் செயலாளர் அருள், ''தமிழகம் முழுவதும் இன்று முதல் 4 கட்டங்களாக கூட்டுறவுச் சங்க தேர்தலை நடத்த தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தத் தேர்தலில் ஆளும் அ.தி.மு.க., கட்சியைச் சேர்ந்தவர்களிடம் மட்டும் மனு பெறுகிறார்கள். மற்றவர்கள் மனு கொடுத்தாலும் வாங்காமல் தள்ளுபடி செய்து அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் கொடுக்கும் மனுவை மட்டும் ஏற்று, தேர்தலே இல்லாமல் அறிவித்து விட திட்டமிட்டுள்ளதாக அறிகிறோம். இது குறித்து கேட்டால் மிகப்பெரும் கலவரத்தை ஏற்படுத்திட ஆளும் கட்சியினர் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வருகிறது.

தேர்தல் நடைபெறும் கூட்டுறவு வங்கிகளில் தனி அதிகாரிகள், அனைத்து முதல் வகுப்பு  உறுப்பினர்கள் அனைவரது வேட்புமனுவைப் பெற ஆவண செய்வதோடு பூர்த்தி செய்த முதல் வகுப்பு உறுப்பினர்களில் தேர்தலில் போட்டியிட விரும்புபவருடைய வேட்புமனுவைப் தனி அதிகாரிகள் பெற்று கொள்ள ஆவண செய்ய வேண்டுகிறோம். மேலும் நடுநிலையோடு செயல்படும் காவல்துறை அதிகாரிகளை அந்தந்த கூட்டுறவு வங்கிக்குப் பாதுகாப்பு வழங்கிட ஆவண செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

அமைதிப் பூங்காவாக உள்ள சேலத்தை இந்தக் கூட்டுறவு சங்க தேர்தல் மூலம் கலவர பூமியாக மாற்றிட முயற்சிக்கும் ஆளும் கட்சியின் திட்டத்தைத் தடுத்து நியாயமான முறையில் கூட்டுறவு சங்க தேர்தலை நடத்திட ஆவன செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொள்ளுகிறோம்'' என்றார்.