திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காதுகேளாதோர் பள்ளி முன்னாள் மாணவர்கள் தர்ணா!

திருப்பூர்

திருப்பூர் காதுகேளாதோர் பள்ளியைச் சேர்ந்த முன்னாள் மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும், இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திருப்பூரை அடுத்துள்ள முருகம்பாளையம் என்ற பகுதியில், காதுகேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதவர்களுக்கான பள்ளிக்கூடம் ஒன்று செயல்பட்டுவருகிறது. இதன் நிறுவனர் முருகசாமி. இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளார். முருகசாமிக்கும் அவரது மனைவி ஜெயந்திக்கும் இடையே கடந்த சில மாதங்களாக பிரச்னை நிலவிவருகிறது. பள்ளியை யார் நிர்வகிப்பது என்று கணவன் மனைவிக்கிடையே நடைபெற்றுவரும் பிரச்னையால், இப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் கல்வி பெருமளவு பாதிக்கப்பட்டிருக்கிறது. முருகசாமிக்கு ஒரு தரப்பினரும், அவரது மனைவி ஜெயந்திக்கு ஒரு தரப்பினரும் ஆதரவு அளித்துவருகிறார்கள்.

இந்நிலையில், பள்ளியையும் அதன் தாளாளர் முருகசாமியையும் காப்பாற்றக் கோரி, திருப்பூர் காதுகேளாதோர் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது, ''இந்த காதுகேளாதோர் பள்ளியில் படித்த பலரும் இன்று சமூகத்தில் நல்ல நிலையில் இருக்கிறோம். பல்வேறு தனியார் நிறுவனங்களில் நல்ல சம்பளத்துடன் பணியாற்றிவருகிறோம். எங்களைப் போன்ற பல நூறு மாற்றுத்திறனாளி மாணவர்களின் வாழ்வாதாரத்துக்கு வழிகாட்டியாகத்  திகழ்ந்த முருகசாமி மீது, சிலர் திட்டமிட்டே பொய்யான புகார்களைச் சுமத்தி, அவரைப்  பள்ளி நிர்வாகத்திலிருந்து வெளியேற்றத் துடிக்கிறார்கள்.

தி.மு.க பெயரைச் சொல்லியும் அடியாட்களை வைத்து மிரட்டியும், தொடர்ந்து பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்திவருகிறார்கள். எனவே, காதுகேளாதோர் பள்ளியை அழிக்க நினைக்கும் தவறான நபர்களிடமிருந்து பள்ளியையும், முருகசாமியையும் காப்பாற்ற, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறி தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், இந்தப் பிரச்னை தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் மனுவும் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தச்  சம்பவத்தால், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வளாகமே சிறிது நேரம் பரபரப்புடன் காட்சியளித்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!