விழா முடிந்து இரண்டு வாரமாகியும் வந்து சேராத நலத்திட்ட உதவிகள்!

நலத்திட்ட உதவிகள்

தேனி மாவட்டத்தில், கடந்த 11-ம் தேதி ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக, மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பிரமாண்டமாக நடத்தப்பட்டது. ஏற்பாடுகள் அனைத்தையும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் செய்திருந்தார். அமைச்சர்கள், ஆர்.பி.உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு ஆகியோர் கலந்துகொண்டனர். 

அந்த நிகழ்ச்சியில்,  7ஆயிரத்து 70 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடுசெய்யப்பட்டன. சிலருக்கு மட்டும் அமைச்சர்கள் முன்னிலையில் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு, மீதம் இருப்பவர்களுக்கு அதற்கான டோக்கன்கள் வழங்கப்பட்டன. அந்த டோக்கன்களை வைத்து அந்தந்தப் பகுதி இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை பொறுப்பாளர்களிடம் நலத்திட்டப் பொருள்களை பெற்றுக்கொள்ளலாம். ஆனால், இன்று வரை பெரும்பாலான இடங்களில் நலத்திட்டப் பொருள்கள் வந்து சேரவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நலத்திட்ட உதவிகள்

இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஒருவர் பேசும்போது, ''எங்கள் பகுதியில் இருக்கும் கட்சிக்காரர்கள் மூலமாக நிகழ்ச்சிக்குச் சென்றோம். சிலருக்கு மட்டுமே நிகழ்ச்சியில் வைத்து பொருள்களைக் கொடுத்தனர். எங்களுக்கெல்லாம் டோக்கன் கொடுத்து வீட்டுக்கு அனுப்பிவிட்டனர். ஆனால், இன்று வரை பொருளும் வரவில்லை. எங்களை கூட்டிச்சென்ற கட்சிக்காரர்களும் வரவில்லை” என்றார். இது குறித்து ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவியைத் தொடர்புகொள்ள முயற்சித்தும் பலனில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!