வெளியிடப்பட்ட நேரம்: 09:00 (27/03/2018)

கடைசி தொடர்பு:09:01 (27/03/2018)

ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு காவல் ஆய்வாளருக்கு 5 லட்சம் அபராதம்..!

செய்யாத குற்றத்துக்காக, ஒருவரை  மூன்று  நாள்கள் காவல் நிலையத்தில் வைத்து கொடுமைப்படுத்தி, பணம் கேட்டு மிரட்டிய காவல் ஆய்வாளருக்கு எதிராகத் தொடர்ந்த  வழக்கில், 9 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது.

 மனித உரிமைகள் ஆணையம்


 

ஓசூரைச் சேர்ந்த கோபால் மற்றும் அவரது அண்ணன் கிருஷ்ணப்பா இருவரும் கோழிப்பண்ணை நடத்திவருகிறார்கள். அதற்காக,கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் உள்ள கோழிப்பண்ணைகளில் கோழிக்குஞ்சுகள் வாங்கப் போவது வழக்கம். இந்த நிலையில், கடந்த 2009-ம் ஆண்டு, வேலாயுதம்பாளையத்தில் உள்ள ஒரு கோழிப்பண்ணையில், கோழிக்குஞ்சுகள் திருடுபோனதாக ஒரு வழக்கு பதிவானது. அந்த வழக்கை விசாரித்த  அப்போதைய வேலாயுதம்பாளையம் காவல்நிலைய ஆய்வாளர் கருணாகரன், மூன்று மாதம் கழித்து கோழிக்குஞ்சுகள் வாங்க வந்த கோபாலை அந்த திருட்டு வழக்குக்காக அழைத்துப் போய், மூன்று நாள்கள் ஸ்டேஷனில் எஃப்.ஐ.ஆர் போடாமல் வைத்து விசாரித்திருக்கிறார். அதோடு, கோபாலை அடித்துத்துவைத்ததோடு, 'வழக்குப் போடாமல் இருக்கணும்னா, 10 லட்சம் தா' என்று மிரட்டியதோடு, அவரது அண்ணன் கிருஷ்ணப்பாவுக்கும் போன் போட்டு பணம் கேட்டு மிரட்டி  யிருக்கிறார்.

ஆய்வாளரின் மிரட்டலை மொபைலில் ரெக்கார்டு செய்த அவர், கரூரைச் சேர்ந்த வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன் மூலம் அப்போதைய கரூர் மாவட்ட எஸ்.பி., தினகரனிடம் புகார் கொடுத்திருக்கிறார். அதற்காக தனிப்படை அமைத்து விசாரித்து, தவறுசெய்த ஆய்வாளர் கருணாகரனை சஸ்பெண்டும் செய்தார். ஆனால் அதற்குள் ஆய்வாளர், கோபால் மீது எஃப்.ஐ.ஆர் போட்டுவிட, வேறு வழியில்லாமல் மறுநாள் அவரை ஜாமீனில் எடுத்தனர். கோபாலுக்கு நடந்த மனிதஉரிமை மீறல்குறித்து சென்னை மனித உரிமை ஆணையத்தில் மனுத்தாக்கல் செய்தார் வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன்.

அந்த வழக்கில், ஒன்பது வருடங்கள் கழித்து தற்போது தீர்ப்பு வந்துள்ளது. '5 லட்சம் கேட்டு மிரட்டியதாலும்,கோபால் மீது தாக்குதல் நடத்தியதாலும், ஆய்வாளர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். கோபால் மீது பொய்வழக்கு போட்டதால், ஆய்வாளர் மீது கிரிமினல் வழக்கும் பதிவுசெய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட கோபாலுக்கு அரசு, இரண்டு மாத காலத்துக்குள் 5 லட்ச ரூபாயை நஷ்ட ஈடாக வழங்க வேண்டும். அந்தப் பணத்தை குற்றவாளி கருணாகரன் சம்பளத்தில் பிடித்தம் செய்துகொள்ள வேண்டும்'' என்று தீர்ப்பு வழங்கி இருக்கிறார்கள்.


இது தொடர்பாக நம்மிடம் பேசிய வழக்கறிஞர் ராஜேந்திரன், "அப்பாவி கோபாலை லாக்கப்பில் வைத்து 'விசாரணை' பட பாணியில் அடித்ததோடு,நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்து, '10 லட்சம் கொடுத்தால் இப்பவே ரிலீஸ் பண்ணிடுறேன்'னு கருணாகரன் மிரட்டி இருக்கிறார். எங்கள் சட்டப் போராட்டத்திற்கு உரிய தீர்வு, காலம் கடந்தாலும் கிடைத்திருக்கிறது" என்றார்.