வெளியிடப்பட்ட நேரம்: 10:00 (27/03/2018)

கடைசி தொடர்பு:10:00 (27/03/2018)

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகத் தொடரும் மாணவர்கள் போராட்டம்

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி, தூத்துக்குடியில்  இன்று அரசினர் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  

போராட்டம்

தூத்துக்குடியில் இயங்கிவரும் ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் கடந்த 44 நாள்களாக  ஆலைக்கு அருகிலுள்ள குமரெட்டியாபுரம் கிராம மக்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். இந்நிலையில்,  தூத்துக்குடியில் கடந்த 24-ம் தேதி, கண்டனப் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இதற்கு ஆதரவாக, கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டன. மினி பஸ்கள், ஆட்டோக்கள், தியேட்டர்கள் ஆகியவை இயங்கவில்லை.   

இப்போராட்டத்திற்கு பல தரப்பினரும் ஆதரவு அளித்துவரும் நிலையில், நேற்று (26.03.18),  தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார்  கல்லூரி மாணவர்கள்  வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கோஷங்களை எழுப்பி, கல்லூரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இன்று (27.03.18),  தூத்துக்குடி, கோரம்பள்ளம் பகுதியில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

இதுகுறித்து  மாணவர்கள் கூறுகையில், “தூத்துக்குடியில், மண்ணையும் மக்களையும் அதிக பாதிப்பிற்குள்ளாக்கிவரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, தற்போது வரை அனைத்து தரப்பினரும் போராட்டம் நடத்திவருகிறார்கள். ஆனால், இன்றுவரை அரசு  சார்பில் யாரும் வந்து மக்களை சந்தித்துப் பேசவில்லை. அதிகாரிகள் ஒருமுறை ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றி உள்ள 10 கிராமங்களுக்குச் சென்று பார்த்தாலே நிலைமை புரியும்.  தினம் தினம் நரகத்தில் வாழ்வது போல உள்ளது. இரவில் அதிகமாக திறந்துவிடப்படும் நச்சுப் புகையால் மூச்சுத்திணறல், தலைவலி ஆகியவை ஏற்படுகிறது. தினமும் இந்த நச்சுக் காற்றை சுவாசிப்பதாலும், இந்த ஆலைக் கழிவுகள் கலந்த தண்ணீரைக் குடிப்பதாலும் பல நோய்கள் வருகின்றன. இந்தக் கிராம மக்களை மருத்துவப் பரிசோதனைசெய்து பார்த்தால், 10-ல் 8 பேருக்கு நோய்கள் இருப்பது தெரியும். ஒரு வயதுக் குழந்தைகூட மந்த தன்மையால்  பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளது. இந்த ஆலைக்கு எதிரான மாணவர்களின் போராட்டம், மாநிலம் முழுவதும் ஜல்லிக்கட்டுப் போராட்டம் போல விரிவுபடுத்தப்பட்டால் மட்டுமே தீர்வு கிடைக்கும்” என்றனர்.

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க