4 மாதங்களாகப் பலிவாங்கத்துடிக்கும் மின்கம்பிகள்! தொடரும் ஒகி புயல் அவலம்

ஓகி புயல்- மின் கம்பி

கி புயலில் அறுந்துவிழுந்த மின் கம்பிகள் சீரமைக்கப்படவில்லை.  நடைபாதையில் மூன்றடி உயரத்துக்கு மின் கம்பிகள் செல்வதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில், நீர் வளம் மிகுந்த பகுதிகளிலிருந்து பிற பகுதிகளுக்கு மின் மோட்டார்மூலம் தண்ணீர் கொண்டுசெல்வது வழக்கம். அதன்படி, நெய்யூர் பேரூராட்சிக்குட்பட்ட பாட்டவிளை பகுதியில் கிணறு அமைத்து, அதிலிருந்து பெத்தேல்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் கொண்டுசெல்லப்படுகிறது. இதற்காக, அதிக அழுத்தம்கொண்ட மின் கம்பிகள், பொதுமக்கள் நடந்து செல்லும் ஒற்றையடிப் பாதை வழியாக அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 30-ம் தேதி ஏற்பட்ட  ஒகி புயலில் மரங்கள் முறிந்து விழுந்ததால், இந்த மின் கம்பங்கள் உடைந்தன. இதையடுத்து, நீரேற்று நிலையத்துக்குச் செல்லும் மின் கம்பிகளும் அறுந்து விழுந்தன.

தரையிலிருந்து 3 அடி உயரத்தில் மின் கம்பிகள்

பின்னர், அவசரகதியில் பணிசெய்த மின்சார வாரியப் பணியாளர்கள், நீரேற்று நிலையத்துக்குச் செல்லும் மின் கம்பிகளைச் சீராக இழுத்துக் கட்டாமல் விட்டுவிட்டனர்.  அதனால், இப்போது தரையிலிருந்து 3 அடி உயரத்தில் மின் கம்பிகள் சென்றுகொண்டிருக்கின்றன. அந்தப் பகுதியில் நடந்துசெல்லும் சிறுவர்களின் கைக்கு எட்டும் தூரத்தில் மின் கம்பிகள் உள்ளன. இதனால், பொதுமக்கள் அந்த நடைபாதையைப் பயன்படுத்தாமல் உள்ளனர். மின் கம்பிகள் தரையை ஒட்டி தாழ்வாகச் செல்வது தெரியாமல் யாராவது சென்றால் மின்சாரம் பாய்ந்து விபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே, செம்பொன்விளை துணை மின் நிலைய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!