கலெக்டரால் பாராட்டப்பட்ட தீயணைப்பு அதிகாரி லஞ்சத்தால் சிக்கினார்!

திருமண மண்டபத்துக்கு தடையில்லாச் சான்று வழங்க, 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய தீயணைப்பு நிலைய அலுவலரைக் கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கைதுசெய்தனர்.

 தீயணைப்பு அதிகாரி

அரியலூர் மாவட்டம், காட்டாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர், பாலகிருஷ்ணன். இவர், புதிதாக திருமண மண்டபம் கட்டியுள்ளார். அந்தத் திருமண மண்டபத்துக்கு, தடையில்லாச் சான்று பெற, ஜெயங்கொண்டம் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அலுவலகத்தில் விண்ணப்பித்தார். இந்த விண்ணப்பத்தை பரிசீலித்த ஜெயங்கொண்டம் தீயணைப்பு நிலைய அலுவலர் தமிழ்வாணன், சான்று வழங்க வேண்டுமென்றால் 30,000 வரை செலவாகும் பரவாயில்லையா என்று சொல்லியிருக்கிறார். அதற்கு, டாக்குமென்ட் எல்லாம் சரியாகத்தானே இருக்கிறது. பிறகு எதற்கு பணம் தரவேண்டும் என்று பாலகிருஷ்ணன் கேட்டிருக்கிறார். உனக்கெல்லாம் சொல்லிப் புரியவைக்கமுடியாது. கொஞ்ச நாள் கழித்து வா என்று கூறி இழுத்தடித்திருக்கிறார்.

தீயணைப்புத்துறை

லஞ்சம் தர விரும்பாத பாலகிருஷ்ணன், இதுகுறித்து அரியலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸில் புகார் செய்தார். அதையடுத்து, அரியலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரின் அறிவுறுத்தலின்படி பாலகிருஷ்ணன், தமிழ்வாணனைத் தொடர்புகொண்டபோது, வி.கைகாட்டி கிராமத்துக்கு வந்து பணத்தைத் தருமாறு தெரிவித்துள்ளார்.  அதையடுத்து,  வி.கைகாட்டி கிராமத்தில் தமிழ்வாணனிடம் 30,000 ரூபாய் லஞ்சப்பணத்தை பாலகிருஷ்ணன் கொடுக்கும்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார், தமிழ்வாணனைக் கையும்களவுமாகப் பிடித்தனர்.

லஞ்ச வழக்கில் கைதாகியுள்ள நிலைய அலுவலர் தமிழ்வாணன், இன்னும் 4 மாதத்தில் ஓய்வுபெற உள்ளார். ஜனவரி 26-ம் தேதி, அரியலூரில் நடந்த குடியரசு தின விழாவில் சிறப்பாகப் பணியாற்றியமைக்காக, முன்னாள் கலெக்டர் லட்சுமிபிரியாவால் பாராட்டப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!