வெளியிடப்பட்ட நேரம்: 16:25 (27/03/2018)

கடைசி தொடர்பு:16:25 (27/03/2018)

நந்திபெருமான் திருக்கல்யாணத்தைக் கண்டால் திருமணம்! குவிந்த 4 மாவட்ட பக்தர்கள்

வைத்தியநாத சுவாமி கோயிலில் திருநந்தியெம்பெருமான் திருக்கல்யாணம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. நந்திபெருமான் திருக்கல்யாணத்தைக் கண்டால் முந்தி திருமணம் நடக்கும் என்பது ஐதிகம் இதைக் காண திருச்சி, தஞ்சை, சேலம், பெரம்பலூர் மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

நந்திபெருமான் திருக்கல்யாணம்

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே திருமழப்பாடி வைத்தியநாத சுவாமி கோயிலில் உள்ள நந்திக்கு பங்குனி புனர்பூசம் நட்சத்திரத்தில் திருமண விழா நடக்கும். இவ்வாண்டு பங்குனி மாதம் நந்திக்கும் சுயம்பிரகாசைக்கும் நடக்கிறது. சிவபெருமான் தனது பாதுகாவலரான நந்தியெம்பெருமானுக்கு தானே முன்நின்று திருமணம் செய்ததாகக் கூறும் புரான நிழச்சி. இதைக் காணும் திருமணமாகாத ஆண்களுக்கும் பெண்களுக்கும் விரைவில் திருமணம் கூடி வரும் என்பர். நந்தி கல்யாணம் கண்டால் முந்திக் கல்யாணம் என்பது ஐதிகம்.

நந்தியெம்பெருமான் திருக்கல்யாணம் வசிஸ்ட்ட முனிவரின் புதல்வி சுயசாம்பிகை தேவியருக்கும் திருவையாறு சிலாத முனிவரின் புதல்வர் திருநந்தியெம் பெருமானுக்கும் திருக்கல்யாண விழாவை முன்னிட்டு கோயில் முன்பு உள்ள மேடையில் மணமகன் திருநந்தியெம்பெருமான் வீற்றிருக்க வைத்தியநாதசுவாமி கோயிலிலிருந்து மணப்பெண் சுயசாம்பிகைதேவி அழைத்து வரப்பட்டார். மேடையில் சுயசாம்பிகை தேவியுடன் திருநந்தியெம்பெருமான் வீற்றிருக்க இருவருக்கும் மஞ்சள், சந்தனம், விபூதி, மாவுப் பொடி, திரவியப்பொடி, தேன், பன்னீர், பஞ்சாமிர்தம், தயிர், பால் போன்றவற்றால் சிறப்பு அபிஷேகமும் தொடர்ந்து கும்பநீரால் மகா அபிஷேகம் நடைபெற்றது. மணமகன், மணமகள் நாதஸ்வர ஊஞ்சல் உற்சவத்துடன் மாலை மாற்றுதல், காப்புக் கட்டுதல் நடைபெற்றது.

தொடர்ந்து திருநந்தியெம் பெருமான், சுயசாம்பிகை தேவியர் அலங்கரிக்கப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க நாதஸ்வர இன்னிசையுடன் மணமகன் நந்தியெம் பெருமான், மணமகள் சுய பொம்பிகை தேவியர் கழுத்தில் திருமாங்கல்யத்தை அணிவித்தார். இத்திருக்கல்யாணம் திருமழப்பாடி சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாதசுவாமி, திருவையாறு அறம்வளர்த்த நாயகி உடனாய ஐயாரப்பர் ஆகிய தெய்வங்களின் திருமுன்பு நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை கோயில் அதிகாரிகள், கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். திருக்கல்யாணத்தை முன்னிட்டு இரவு கொள்ளிட ஆற்றுத் திடலில் தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் கிராமிய கலைவிழா நடைபெற்றது.