வெளியிடப்பட்ட நேரம்: 15:09 (27/03/2018)

கடைசி தொடர்பு:19:52 (27/03/2018)

பிளான் பண்ணி கொள்ளையடித்துவிட்டு நாடகமாடிய ஊழியர்கள் - 12 மணி நேரத்தில் சிக்கினர்

கொள்ளை

சென்னையில், வேலைபார்த்த இடத்திலேயே பணத்தைக் கொள்ளையடித்துவிட்டு, நாடகமாடிய ஊழியர்கள் மற்றும் அவரது கூட்டாளிகளை போலீஸார் 12 மணி நேரத்தில் கைதுசெய்தனர். 

சென்னை பிராட்வே, செம்புதாஸ் தெருவில் பிரபல இரும்புக்கம்பி நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தின் எதிரில் உள்ள முதல்மாடியில் அலுவலகம் செயல்படுகிறது. இங்கு மணிமாறன், ஓதுபாய், மொகைதீன், கார்த்திக், மகராஜன் ஆகியோர் பணம் வசூல்செய்யும் வேலைபார்த்துவந்தனர். வசூலாகும் பணத்தை வங்கியில் டெபாசிட் செய்வது வழக்கம். சம்பவத்தன்று நள்ளிரவில், வங்கியில் செலுத்துவதற்காக நிறுவனத்தின் ஊழியர்கள் பணத்தை எண்ணிக்கொண்டிருந்தனர். அப்போது, அலுவலகத்துக்குள் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் நுழைந்த கொள்ளையர்கள், அங்கிருந்தவர்களைத் தாக்கியதோடு, கயிற்றால் கட்டிப்போட்டனர். பிறகு பணம், செல்போன்கள் ஆகியவற்றைக் கொள்ளையடித்துவிட்டுத் தப்பினர். 

 இதையடுத்து, அலுவலக மேலாளர் முகமது சலீம், எஸ்பிளனேட் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், துணை கமிஷனர் செல்வக்குமார் மேற்பார்வையில், உதவி கமிஷனர் ஜான் அருமைராஜ், இன்ஸ்பெக்டர்கள் ஜூலியஸ் சீசர், சரவணப்பிரபு, உதவி ஆய்வாளர் ஏழுமலை மற்றும் போலீஸார் கிருஷ்டோபர் ராஜ், பாபு அம்பேத்கர், முத்துராஜ் ஆகியோர்கொண்ட தனிப்படையினர் கொள்ளையர்களைத் தேடினர். அப்போது, வேலைபார்க்கும் சில ஊழியர்கள்மீது சந்தேகம் எழுந்தது. அவர்களிடம் விசாரித்தபோது, திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 

 இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ''மணிமாறனும் கார்த்திக்கும் சேர்ந்து சொகுசு வாழ்க்கை வாழ, பணத்தைக் கொள்ளையடிக்கத் திட்டமிட்டுள்ளனர். இதற்காக, சென்னை காக்கா தோப்பைச் சேர்ந்த ரவுடி விஜய் என்ற விஜயகுமார், ராஜா சாந்தகுமார், சுப்பிரமணி ஆகியோருடன் சேர்ந்து கொள்ளையடிப்பதுகுறித்து சதித்திட்டம் தீட்டியுள்ளனர். அதன்படி, கடந்த 24.3.2018ல், இரவு 8 மணியளவில் ஆயுதங்களுடன் விஜயகுமார், ராஜா, சாந்தகுமார், சுப்பிரமணி ஆகியோர் அலுவலகத்தின் அருகே பதுங்கியுள்ளனர். அப்போது, திட்டமிட்டப்படி கார்த்திக் வசூல் பணம், ரூ. 14 லட்சத்தைச் செலுத்துவதற்காக அலுவலகத்துக்குச் சென்றார். அதன்பிறகு, திரும்பி வந்த கார்த்திக் அங்கு பதுங்கிக்கொண்டார்.

கொள்ளை

அடுத்து, மணிமாறன் வசூல்செய்த பணம் 11 லட்சத்துடன் அலுவலகத்துக்குச் சென்றுள்ளார். அவரைப் பின்தொடர்ந்து விஜய்குமார், ராஜா, சாந்தகுமார், சுப்பிரமணி ஆகியோர் அலுவலகத்துக்குள் நுழைந்தனர். அலுவலகத்திலிருந்த முகமது சலீம் என்பவரின் கழுத்தில் அரிவாளை வைத்த கொள்ளையர்கள், பீரோவிலிருந்த பணத்தையும், மணிமாறனிடமிருந்த 54 லட்சம் ரூபாயையும் எடுத்துக் கொண்டனர். செல்போன்கள்மூலம் தகவலைத் தெரிவிக்காமலிருக்க, அனைவரின் செல்போன்களையும் பறித்துக்கொண்டனர்.

 அப்போது, அலுவலக ஊழியர் மகராஜன் தலையில் அரிவாளால் வெட்டிய கொள்ளையர்கள், முகமது சலீம், கணக்காளர் தினேஷ், மகராஜன் மற்றும் மணிமாறனையும் கட்டிப்போட்டனர். பிறகு, சம்பவ இடத்திலிருந்து தப்பிவிட்டனர். மணிமாறனிடம் நடத்திய விசாரணையில், கொள்ளையர்கள்குறித்த விவரங்கள் தெரியவந்தது. இதையடுத்து, கொள்ளையர்களை 12 மணி நேரத்தில் கைது செய்துள்ளோம். அவர்களிடமிருந்து 44 லட்சம் ரூபாயையும் பறிமுதல்செய்துள்ளோம்'' என்றனர். 

 கொள்ளையடித்த பணத்தைப் பங்கு பிரித்த கொள்ளையர்கள், குறிப்பிட்ட தொகையை நீதித்துறையைச் சேர்ந்தவர்களிடம் கொடுத்துள்ளனர். இந்த வழக்கில் சிக்கினாலும், ஜாமீன் எடுக்க முன்கூட்டியே கொள்ளையர்கள் கொடுத்ததாக விசாரணையின்போது தெரிவித்துள்ளனர். இதையடுத்து போலீஸார், கொள்ளையர்கள் கொடுத்த பணத்தை அவர்களிடமிருந்து சிரமப்பட்டு மீட்டுள்ளனர். கொள்ளை நடந்த 12 மணி நேரத்தில் கொள்ளையர்களைப் பிடித்த தனிப்படை போலீஸாரை போலீஸ் கமிஷனர் ஏ.கே. விஸ்வநாதன் பாராட்டியுள்ளார்.