வெளியிடப்பட்ட நேரம்: 16:05 (27/03/2018)

கடைசி தொடர்பு:16:55 (27/03/2018)

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 44 வது நாளாகத் தொடரும் போராட்டம்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகத் தூத்துக்குடி மாவட்டத்தில் 44 வது நாளாகத் தொடர்ந்து மக்களின் போராட்டம் நடைபெற்று வருகிறது. 

ஸ்டெர்லைட்

 பா.ம.க தலைவர் ஜி.கே.மணி குமரெட்டியாபுரம் கிராமத்துக்கு நேரில் வந்து போராடும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், "இங்கு போராடும் உங்களது நியாயமான போராட்டம் உலகம் முழுவதும் எட்டியுள்ளது. உங்களுக்காக லண்டனிலும் இந்த ஆலை இயக்குநர் அனில் அகர்வால் வீட்டு முன்பாகத் தமிழர்கள் போராடி வருகிறார்கள். ஆனால், இங்கு போராட்டம் நடத்த உள்ளூர் போலீஸார் அனுமதி மறுப்பது கண்டிக்கத்தக்கது.

சோறு சமைக்க அடுப்பு வைக்கவும் பந்தல் போடவும் அனுமதி இல்லை. போராட்டத்தை அடக்கினால் இனி பொறுக்க மாட்டோம். கட்சி சார்பின்றி தன்னெழுச்சியாக மக்களே நடத்தும் இப்போராட்டத்தை அரசு மதிக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையால் உள்ளூர் மக்களுக்கு  தோல்நோய்கள், சுவாசக் கோளாறு, மூச்சுத்திணறல்,  மலட்டுத்தன்மை, கருச்சிதைவு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. அதன் காரணமாகவும் மக்கள் போராடி வருகிறார்கள். 

இந்தப் பகுதி மக்களும் நாங்களும் தொழில் வாய்ப்புகளையும் தொழில் முன்னேற்றத்தையும் எதிர்க்கவில்லை. அதேசமயம், மக்களை அழித்துவிட்டு ஏற்படப் போகும் முன்னேற்றம் தேவையில்லை என்பதற்காகவே இப்போராட்டம் நடக்கிறது. இப்படி ஒரு கொடிய தொழிற்சாலை வேண்டாம் என்பதுதான் இப்பகுதி மக்களின் கோரிக்கை.

போராட்டம்

இந்த ஆலை விரிவாக்கம், இப்போராட்டத்தைப் பற்றி பா.ம.க இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி நாடாளுமன்றத்தில் பேசுவதாகத் தெரிவித்துள்ளார். நிலம், நீர், காற்று ஒருபோதும் மாசுபடக்கூடாது என்பதற்காக இப்போராட்டம் நடக்கிறது. அறவழியில் நடக்கும் இப்போராட்டத்துக்கு அரசு அனுமதி தர வேண்டும். தமிழ்நாட்டுப் பெண்கள் சாதாரணமானவர்கள் அல்ல. 

ஆலைக்கு எதிராகப் போராடிய 8 பேர்மீது போடப்பட்ட பொய் வழக்கை அரசு வாபஸ் வாங்க வேண்டும். இந்த ஆலையால் இதுவரை 13 பேர் இறந்தாகவும் பலமுறை சிறிய விபத்துகள் நடந்ததாகவும் ஆலை தரப்பினரின் தகவல் மூலம் தெரியவருகிறது. ஆலைக் கழிவால் நிலத்தடி நீர் மாசுபட்டுவிட்டது. கடலில் கலப்பதால் மீன்வளம் பாதிக்கப்பட்டுள்ளது.

இப்போராட்டத்தை அடக்க நினைத்தால் மாவட்டத்தைத் தாண்டி, மாநிலம் முழுவதும் விரிவடையும். போராடும் மக்களுக்கு ஆதரவாக பா.ம.க துணை நிற்கும்" என்றார். இந்த ஆலையால் பாதிக்கப்பட்ட நிலத்தடி நீர், அந்த நீரில் சமைக்கப்பட்ட அரிசி சாதத்தை ஊர்மக்கள் ஜி.கே.மணியிடம் காட்டினார்கள்.