`கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராகச் சேருங்கள்' - கலெக்டர் ஆபீஸை கலங்கடித்த விவசாயி சங்கப் பொருளாளர்

கூட்டுறவுச் சங்கத்தில் உறுப்பினராகச் சேர மூன்றுமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளைக் கண்டித்து ஆட்சித்தலைவர் சேம்பரில் உண்ணாவிரதம் இருக்க முயன்ற விவசாயக் கூட்டமைப்பு பொருளாளர் கைது செய்யப்பட்டார்.

தமிழ்நாடு இளம் விவசாயிகள் மற்றும் விவசாயக் கூட்டமைப்பு பொருளாளராக இருப்பவர் மணவை கண்ணன். இவர் மணவாளக்குறிச்சி கூட்டுறவுச் சங்கத்தில் உறுப்பினராகச் சேர 22.1.2018 அன்று விண்ணப்பித்திருக்கிறார். ஆனால், இவரை உறுப்பினராகச் சேர்க்கவில்லை எனத் தெரிகிறது. இதையடுத்து, நேரிலும் தபாலிலும் என மூன்றுமுறை மனு அளித்தும் அவரை உறுப்பினராகச் சேர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி இன்று நாகர்கோவில் ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் கலெக்டர் அறை முன்பு அமர்ந்து திடீரென உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். அவர் கையில் வைத்திருந்த பதாகையில் "தமிழக அரசே, மாவட்ட ஆட்சியரிடம் மூன்று முறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை" என எழுதப்பட்டிருந்தது.

விவசாய கூட்டமைப்பு பொருளாளர் கண்ணன்


ஆட்சித்தலைவர் சேம்பர் முன் மணவை கண்ணன் போராட்டம் நடத்தியதை அறிந்து நேசமணிநகர் இன்ஸ்பெக்டர் சாய்லெட்சுமி தலைமையிலான போலீஸார் அங்கு சென்று அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஆட்சித்தலைவர் அலுவலகக் கூடுதல் கட்டடத்தில் இயங்கும் கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர். மனுமீது நடவடிக்கை எடுப்பதாக இணை பதிவாளர் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து ஆட்சித்தலைவர் அலுவலக சேம்பர் வாசலில் அமர்ந்து போராட்டம் நடத்தியதற்காக மணவை கண்ணனை போலீஸார் கைது செய்தனர். இதுகுறித்து மணவை கண்ணன் கூறுகையில், ஒகி புயலில் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் கடன் பெற்ற விவசாயிகளிடம் கட்டாயப்படுத்தி கடன் தவணை வசூலித்த கூட்டுறவுத்துறை இணை பதிவாளர்மீதும் மணவாளக்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கச் செயலாளர்மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போராடியதால் என்னை உறுப்பினராகச் சேரவிடாமல் தடுக்கிறார்கள். அதனால்தான் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டேன்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!