`பெயர் முக்கியமில்லை; தீர்வுதான் முக்கியம்' - காவிரி விவகாரத்தில் கலகலத்த தமிழிசை!

காவிரி பிரச்னையில் பெயர் என்பது முக்கியமல்ல. தீர்வு காண்பதுதான் முக்கியம் எனத் தமிழிசை சௌந்தரராஜன் பேசியுள்ளார். 

தமிழிசை சௌந்தரராஜன்

திருவாரூரில் நடைபெறும் பா.ஜ.க பொருளாளர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டார். கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "கர்நாடகாவில் சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்தல் அறிவிப்பால் தமிழகத்துக்கான காவிரி நீர் உரிமையில் பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்பது கவலையாக இருந்து வந்தது. தேர்தல் ஆணையர் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கும் கர்நாடகத் தேர்தலுக்கும் இடையூறு இருக்காது எனத் தகவல் தெரிவித்திருக்கிறார். இது வரவேற்கத் தக்கது. காவிரி பிரச்னையில் பெயர் என்பது முக்கியமல்ல. தீர்வு காண்பதே  முக்கியமானது. நியூட்ரினோ திட்டம் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. மத்திய அரசின் நல்ல திட்டங்களை வரவேற்கவில்லை என்றால் வருங்கால சந்ததியினர் பாதிக்கப்படுவார்கள்.

ஸ்டெர்லைட் காங்கிரஸ் ஆட்சியின்போது கொண்டுவரப்பட்டது. பாதிப்பை ஏற்படுத்தும் திட்டங்களைக் காங்கிரஸ் கொண்டுவந்தபோது தி.மு.க எதிர்க்கவில்லை. தற்போது எதிர்ப்பது ஏற்கதக்கதல்ல. வைகோ, திருமாவளவன், ஸ்டாலின் போன்றோர் காவிரி விவகாரத்தில் குரல்கொடுத்து வருகிறார்கள். ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது என்ன செய்தார்கள். தமிழகத்துக்குக் காவிரி நீர் பெற்றுத் தருவதில் மத்தியில் ஆளும் பா.ஜ.க-வாக இருந்தாலும், தமிழக பா.ஜ.க-வாக இருந்தாலும் எந்தப் பின்னடைவும் இருக்காது" எனக் கூறினார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!