வெளியிடப்பட்ட நேரம்: 15:46 (27/03/2018)

கடைசி தொடர்பு:16:57 (27/03/2018)

குக்கிராம டீக்கடையில் எடப்பாடி பழனிசாமி! - வைரலான தமிழக அரசின் செய்திக்குறிப்பு

எடப்பாடி பழனிசாமி

‘குக்கிராமத்தில் தேனீர் அருந்திய முதல்வர் எடப்பாடி பழனிசாமி’ என்ற தலைப்பில் வெளியான தமிழக அரசின் செய்திக் குறிப்பு ஒன்று இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

அரசின் செய்திக் குறிப்பில், “இன்று (27.3.2018), சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள சமுத்திரம் என்ற குக்கிராமத்தில் தேனீர் அருந்திய எடப்பாடி கே.பழனிசாமி..! சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றியம், சமுத்திரம் என்ற குக்கிராமத்தில், புதிய ஆரம்ப சுகாதார நிலையத்தை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தார். அதன் பின்பு, அந்தக் குக்கிராமத்தில் உள்ள அம்பாள் தேனீர் கடைக்குச் சென்று தேனீர் அருந்தினார்.

அப்போது அந்தக் கடை உரிமையாளரிடம், இந்தக் கிராமத்தில் தேனீர் வியாபாரம் எவ்வாறு நடைபெறுகிறது என்று கேட்டறிந்தார். தேனீர் அருந்திய பின்பு, அதற்கான தொகையை அவர், கடை உரிமையாளரிடம் வழங்கினார். மேலும், தேனீர் மிகவும் நன்றாக இருந்ததென்று தெரிவித்ததோடு அந்தக் கடை உரிமையாளரையும் பாராட்டினார். இந்த நிகழ்வின்போது மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தனர்” 

எடப்பாடி பழனிசாமி

இவ்வாறு அந்தச் செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்திலும் இந்தச் செய்திக் குறிப்பு புகைப்படத்துடன் பகிரப்பட்டுள்ளது. ‘முதல்வர் டீக்கடையில் டீக்குடித்துவிட்டு, காசு கொடுப்பதற்கெல்லாமா அரசு செய்திக் குறிப்பு வெளியிடும்?’ என்று ட்விட்டரில் இணையவாசிகள் விமர்சித்து வருகின்றனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க