கொள்ளையர்களாக மாறிய இன்ஜினீயர்கள், சட்டக்கல்லூரி மாணவர் - ஏழு மாதங்களுக்குப் பிறகு சிக்கிய கதை 

கொள்ளை

சென்னை மதுரவாயலில் நடந்த கொள்ளைச் சம்பவத்தில் ஏழு மாதங்களுக்கு முன்பு இரண்டு இன்ஜினீயர்கள், சட்டக்கல்லூரி மாணவர், எம்.பி.ஏ பட்டதாரி என நான்கு பேரை போலீஸார் கைதுசெய்துள்ளனர். 

 சென்னை, காட்டுப்பாக்கம், டிரங் சாலையைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர், மதுரவாயல் பகுதியில் உள்ள ஆடிட்டர் அலுவலகத்தில் பணியாற்றினார். இவர், 30.8.2017ல அன்று 19 லட்சம் ரூபாயை வங்கியிலிருந்து எடுத்துக்கொண்டு அலுவலகத்துக்கு பைக்கில் வந்து கொண்டிருந்தார். மதுரவாயல் போலீஸ் எல்லைக்குட்பட்ட அடையாளப்பட்டு என்ற இடத்தின் அருகே மணிகண்டன் வந்தபோது, அவ்வழியாக ஹெல்மெட் அணிந்துகொண்டு பைக்கில் வந்த கொள்ளையர்கள் அவரை வழிமறித்தனர். பிறகு, கத்திமுனையில், மணிகண்டனிடம் பணத்தைப் பறிக்க முயன்றனர். அப்போது, கொள்ளையர்களிடமிருந்து தப்பிக்க மணிகண்டன் போராடினார்.

கொள்ளையர்கள், மணிகண்டனைக் கத்தியால் குத்திவிட்டு பணத்தைப் பறித்துச் சென்றனர். கொள்ளைச் சம்பவம் குறித்து மணிகண்டன் மதுரவாயல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸார் கொள்ளையர்களைத் தேடிவந்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில் கொள்ளையர்கள் குறித்த தகவல் தெரியவந்துள்ளது. இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் இன்ஜினீயர்கள், சட்டக்கல்லூரி மாணவர், எம்.பி.ஏ பட்டதாரி என்றும் தெரியவந்தது. மேலும், ஆடிட்டர் அலுவலகத்தில் பணியாற்றிய ஊழியர் ஒருவர்தான் கொள்ளைச் சம்பவத்துக்கு மூளையாகச் செயல்பட்டதும் தெரிந்தது. 

 இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "ஆடிட்டர் அலுவலகத்தில் பணியாற்றிய ஊழியர் ஒருவர் மூலமே கொள்ளைச் சம்பவம் நடந்திருப்பது தெரியவந்தது. இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் நான்கு பேர் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். நெல்லை மாவட்டம், தென்காசியைச் சேர்ந்த ராஜசேகர் என்பவர், எம்.பி.ஏ படித்துவிட்டு ஆடிட்டர் அலுவலகத்தில் பணியாற்றியுள்ளார். இவர்தான் மணிகண்டன் பணம் எடுத்துவரும் தகவலைக் கொள்ளையர்களுக்குத் தெரிவித்துள்ளார். இதனால், நெல்லை, சிந்துபூந்துறையைச் சேர்ந்த மணிகண்ட பூபதி, தட்சணாமூர்த்தி, வேலப்பராஜா ஆகியோர் மணிகண்டனிடமிருந்து 19 லட்சம் ரூபாயைப் பறித்துள்ளனர்.

இதில் மணிகண்டபூபதி தனியார் இன்ஜினீயரிங் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்துவருகிறார். தட்சணாமூர்த்தி டிப்ளோமா இன்ஜினீயர். வேலப்பராஜா, சட்டக் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்துவருகிறார். ஆடம்பர வாழ்க்கைக்காகத்தான் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாகத் தெரிவித்தனர். மேலும், கொள்ளையடித்த பணத்தில் சொகுசு காரும், விலை உயர்ந்த பைக்கும் வாங்கியுள்ளனர். தொடர்ந்து கொள்ளையடித்த பணம் மூலம் விதவிதமான உடைகளை அணிந்து சொகுசாக வாழ்ந்துள்ளனர். இவர்களிடமிருந்து கார், பைக்குகள், இரண்டு லட்சம் ரூபாய் ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ளோம்" என்றனர். 

 இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் கொள்ளையர்கள் பிடிபட்டாலும் அவர்களிடமிருந்து பணம், கார், பைக்குகளைப் பறிமுதல் செய்வதில் பல்வேறு சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும், கொள்ளை நடந்து ஏழு மாதங்கள் கடந்ததால் கொள்ளையர்களிடமிருந்து முழு பணத்தையும் மீட்க முடியவில்லை. கொள்ளையர்கள்மீது நெல்லை மாவட்டம் டவுன் போலீஸ் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!