வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (27/03/2018)

கடைசி தொடர்பு:19:20 (27/03/2018)

‘மருமகளை அனுப்ப முடியாது!’ - உறவினர்களால் மாமனாருக்கு நேர்ந்த சோகம்

 சென்னையில் 75 வயது முதியவரைத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 சென்னைப் புரசைவாக்கத்தைச் சேர்ந்தவர் அப்துல் மஜித். 75 வயதாகும் இவரைக் கடந்த சில தினங்களுக்கு முன்பு உறவினர்கள் சிலர் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதைப்பார்த்த அப்துல் மஜித்தின் மகள்கள், அவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், மூக்கில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அறுவைசிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து அப்துல் மஜித் கொடுத்த புகார் மற்றும் வாக்குமூலம் அடிப்படையில் வேப்பேரி போலீஸார் விசாரித்துவருகின்றனர். முதல்கட்டமாகப் புகார் ஏற்பு சான்றிதழ் மட்டும் கொடுத்துள்ள போலீஸார், முதியவரைத் தாக்கியவர்கள் மீது இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அப்துல் மஜித்தின் உறவினர்கள் தெரிவித்தனர். 

மேலும், "சம்பவத்தன்று முதியவரின் மருமகளை அழைத்துச் செல்ல அவருடைய சகோதரர்கள் வந்தனர். அவர்களுடன் செல்ல அவர் விரும்பவில்லை. இதில் ஏற்பட்ட தகராறில்தான் முதியவர் தாக்கப்பட்டுள்ளனர். அவரைத் தாக்கிவிட்டு அந்தப் பெண்ணையும் அழைத்துச் சென்றுவிட்டனர்" என்றனர் உறவினர்கள். 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``சம்பவத்தன்று அப்துல் மஜித் மற்றும் அவரின் மருமகள் எனப் பலர் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது, மருமகளின் சகோதரர்கள் அங்கு வந்துள்ளனர். அவர்களுக்கும் அப்துல் மஜித்துக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மருமகளின் சகோதரர்கள் அப்துல் மஜித்தைத் தாக்கியுள்ளனர். இதில்தான் அவரது மூக்கில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியுள்ளது. குடும்பத் தகராறில் நடந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகிறோம்" என்றனர்.