உப்பு சுத்திகரிப்பு நிலையம் தனியார்மயமாக்குவதைக் கண்டித்து தொழிலாளர்கள் 700 பேர் மறியல்!

ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் பகுதியில் இயங்கிவரும் அரசு உப்பு நிறுவனத்தில் உள்ள உப்பு சுத்திகரிப்பு நிலையத்தை தனியாருக்கு குத்தகைக்கு விடுவதைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட தொழிலாளர்கள் 700 பேர் கைது செய்யப்பட்டனர்.

தொழிலாளர்கள்

வாலிநோக்கத்தில் இயங்கிவரும் அரசு உப்பு நிறுவனத்தின் நிதிநெருக்கடியைச் சமாளிக்கவும் லாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றவும் அங்கு உப்பு சுத்திகரிப்பு நிலையம் ஏற்படுத்தப்பட்டது. இந்த நிறுவனத்தைக் கட்டமைக்க தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் விடப்பட்டது. அந்த நிறுவனமானது முழுமையாகக் கட்டமைத்து நிறுவனத்திடம் ஒப்படைக்காத நிலையில் உப்பு சுத்திகரிப்பு நிறுவனத்தை டாடா நிறுவனத்துக்கு பல சலுகைகளுடன் இரண்டு ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் விட அறிவிப்பு செய்யப்பட்டது. தொழிலாளர்களின் கடும் எதிர்ப்பின் காரணமாகவும் மாவட்ட அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்பாலும் தொழிலாளர்களின் சம்மதம் இல்லாமல் தனியாருக்கு கொடுக்க மாட்டோம் என நிர்வாகத்தின் சார்பில் உறுதியளிக்கப்பட்டது.

இந்த நிலையில் மேலாண்மை இயக்குநர் மீண்டும் டாடா நிறுவனம் மட்டுமே பங்கேற்கும் விதத்தில் ஒப்பந்தம் கோரப்பட்டு டாடா நிறுவனத்துக்கு இரண்டு ஆண்டுகள் ஒப்பந்தம் விடும் முயற்சியில் இறங்கியுள்ளார். இதை எதிர்த்து ஆர்ப்பாட்டம், உள்ளிருப்புப் போராட்டம் எனப் பலகட்ட போராட்டங்களை அனைத்து தொழிற்சங்கங்களும் நடத்தினர். இந்நிலையில் அரசு உப்பு நிறுவனத்தின் எந்தப் பணிகளையும் தனியாருக்கு கொடுக்கக் கூடாது, அரசு உப்பு நிறுவனமே ஏற்று நடத்த வேண்டும். அரசு உப்பு  நிறுவனத்துக்கு தமிழக அரசு நிதியுதவி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வாலிநோக்கம் விலக்கு ரோட்டில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. சி.ஐ.டி.யு மாவட்டச் செயலாளர் எம்.சிவாஜி தலைமையில் நடந்த இந்தச் சாலைமறியலில்  உப்பு நிறுவனத்தில் பணியாற்றும் அனைத்து தொழிற்சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், ஊர் பொதுமக்கள், ஜமாத் நிர்வாகத்தினர், சர்வ கட்சியினர், மகளிர் மன்றத்தினர் என 700-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். இதனால் ஏர்வாடி - சாயல்குடி இடையேயான கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து தடைபட்டது. இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களைப் போலீஸார் கைது செய்து வாகனங்களில் ஏற்றிச் சென்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!