தாத்தா செய்த காதலுக்காக 3 தலைமுறைகளாக ஊரைவிட்டு ஒதுக்கி வைத்திருக்கும் கொடுமை! | Two families are set aside from village because of grandfather's love marriage for more than 75 years!

வெளியிடப்பட்ட நேரம்: 19:31 (27/03/2018)

கடைசி தொடர்பு:19:31 (27/03/2018)

தாத்தா செய்த காதலுக்காக 3 தலைமுறைகளாக ஊரைவிட்டு ஒதுக்கி வைத்திருக்கும் கொடுமை!

காதல்

``தாத்தா செய்த காதல் திருமணத்துக்காக எங்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைச்சிருக்காங்க" எனக் கதறுகிறது இரண்டு குடும்பங்கள்.

திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்துள்ளது மண்பறை கிராமம். இந்தக் கிராமத்தில் கடந்த 75 வருடங்களுக்கு முன்பு வசித்தவர் மூக்கன். இவர் வீரம்மாள் என்ற பெண்ணைக் காதலித்ததாகவும், அவர்களின் காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு ஏற்படவே, மூக்கனும், வீரம்மாளும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் மூக்கன் திருமணம் செய்த வீரம்மாளுக்கு, ஏற்கெனவே திருமணம் நடந்திருந்ததாகவும், இப்படியான தவறு செய்பவர்களை ஊரைவிட்டு விலக்கி வைப்பதும் அந்த ஊரின் வழக்கம்.

அதன்படி மூக்கன்-வீரம்மாள் தம்பதி ஊரைவிட்டு விலக்கி வைக்கப்பட்டனர். அதன்பிறகு ஊருக்குள் நடந்த நல்லது, கெட்டது மற்றும் கோயில் திருவிழாக்களில் அந்தக் குடும்பத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மூக்கனும், அவரது மனைவி வீரம்மாளும் இறந்து விட்டனர். இந்நிலையில் கடந்த மூன்று தலைமுறைகளாக அவர்களின் வழிவந்த குடும்பத்தினரை இப்போதும் ஊரை விட்டு விலக்கி வைத்திருப்பதுதான் சோகம்.

மூக்கனுக்குப் பெருமாள், வீராசாமி என இரண்டு மகன்கள். அவர்களில் வீராசாமி மகன் பிரபாகரன் நம்மிடம், ``தாத்தா செய்த தவறுக்கு அவரை ஊரைவிட்டு விலக்கி வைத்தார்கள், சரி. ஆனால், அடுத்தடுத்த தலைமுறையில் வந்த நாங்கள் என்ன தவறு செய்தோம்? இப்போதும் நாங்கள் தண்டனை அனுபவிக்கிறோம். எங்கள் மீது ஊர்க்காரர்களுக்கு இன்னமும் இரக்கம் வரவில்லை" எனப் புலம்பியபடியே தொடர்ந்து பேசினார். ``எங்களின் தாத்தா மூக்கன், பாட்டியைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். எங்க பாட்டி ஏற்கெனவே திருமணம் ஆனவராம். அதுதான், தாத்தா செய்த தவறு. தாத்தாவுக்கு இரண்டு மகன்கள். அவர்கள் திருமணத்துக்கும் ஊரில் உள்ள யாரும் வரவில்லை. திருமணம் ஆன பிறகு அவர்களுக்குப் பிறந்த பிள்ளைகளான எங்களிடமும் ஊரில் யாரும் பேசுவதில்லை. எங்களிடம் பேசினால் அவர்களுக்கு அபராதம், கிராமப் பஞ்சாயத்தில் தண்டனை விதிப்பார்கள். இதனால் ஊருக்குள் இருக்கும், குழந்தைகள்கூட எங்களிடம் பேசாது. `ஒத்தைவீட்டுகாரர்கள்' என இப்போதும் நாங்கள் அழைக்கப்படுகிறோம்.

உடைத்தெறியப்பட்ட குடிநீர் குழாய்

இதுதொடர்பாக, கடந்த 2015-ல் ஊர்க்கூட்டம் போட்டு, 'தவறு நடந்து பல வருடம் ஆகிடுச்சு. அதனால், உங்களை ஊரோடு சேர்த்துக் கொள்கிறோம்' என 1000 ரூபாய் வரி கட்டச் சொன்னார்கள். நாங்களும் கட்டினோம். ஆனால், அடுத்த சில மாதங்களில், 'உங்களை ஊரோடு சேர்த்துக்கொள்ள முடியாது' என்றனர். இதுகுறித்து, கலெக்டர், ஆர்.டி.ஓ. எனப் பலரிடமும் மனு கொடுத்தோம். இதுதொடர்பான பேச்சுவார்த்தையில், கடந்த 2016-ம் ஆண்டு இருதரப்பும் சமாதானமாகப் போவதாக மனுவை முடித்தார்கள். ஆனால் ஊர்க்காரர்கள், 'எப்படி நீங்கள் புகார் கொடுக்கலாம்?' எனக் கேட்டதுடன், கிராமப் பொதுக்குழாயில் தண்ணீர் பிடிக்கக் கூடாது எனக் குடிநீர் குழாயை உடைத்தெறிந்தனர்.

இதுதொடர்பாக, இந்தச் சம்பவத்துக்குக் காரணமாக இருந்த ஓய்வுபெற்ற காவலர் கணேசன், எஸ்.ஐ. சவுந்தர்ராஜன், முன்னாள் ஊராட்சித் தலைவர் சபாபதி மற்றும் மண்பறையைச் சேர்ந்த மணி ஆகியோர் மீது கடந்த 2017-ல் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தேன். அதன் விளைவாக கடந்த 4.4.2017 அன்று புலிவலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன் பிறகும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் குடிக்கத் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்டோம். இதுதொடர்பாக ஊரில் மினி டேங்க் உள்ள இடத்துக்குச் சொந்தமான வீட்டில் வசிக்கும் பெரியவர் ஒருவரிடம் தண்ணீர் திறந்துவிடக் கேட்டோம். அதற்கு ஊரே சேர்ந்து, அந்தப் பெரியவரிடம் தகராறு செய்தனர். இப்போதும், ஊர்க்காரர்கள், ஊரை எதிர்த்து எப்படி வழக்கு போடலாம்? போலீஸில் எப்படிப் புகார் கொடுக்கலாம் எனக் கேட்டு எங்கள் மீது கோபமாகவே உள்ளனர். எங்கள் தாத்தா செய்த தவறுக்கு நாங்கள் என்ன செய்வோம். அவர் இறந்து இத்தனை வருடங்கள் ஆன பிறகும்  எங்களை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்” என்றார்.

இதற்கு மாவட்ட நிர்வாகம்தான் தீர்வுகாண வேண்டும் எனப் பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை வைத்தனர். இப்பிரச்னையில் அரசு என்ன செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்...!


டிரெண்டிங் @ விகடன்