வெளியிடப்பட்ட நேரம்: 19:15 (27/03/2018)

கடைசி தொடர்பு:19:15 (27/03/2018)

ஓடும் ரயிலிலிருந்து விழுந்தும் உயிர்தப்பிய கூலித்தொழிலாளி - ஆபத்துக்கு அபாயச் சங்கிலி உதவவில்லை எனப் பயணிகள் புகார் 

ரயில் பயணி

ஓடும் ரயிலிலிருந்து தவறி விழுந்த கூலித்தொழிலாளி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளார். தண்டவாளத்தில் மயங்கிய நிலையில் அவரை மீட்ட போலீஸார், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 

சென்னையிலிருந்து செங்கோட்டைக்குச் செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் நேற்றிரவு சென்றது. இந்த ரயிலில் முன்பதிவில்லாத பெட்டியில் பயணிகள் கூட்டம் அலைமோதின. ரயிலின் படிக்கட்டில் சிலர் அமர்ந்திருந்தனர். ரயில் செங்கல்பட்டு அருகே ஒத்திவாக்கம் சென்றபோது படியில் அமர்ந்திருந்த ஒருவர் தவறி கீழே விழுந்தார். இதைப்பார்த்த சக பயணிகள் அலறினர். இன்னும் சிலர் ரயிலில் உள்ள அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்தனர். ஆனால், ரயில் நிற்கவில்லை. அடுத்த ரயில் நிலையமான விழுப்புரத்தில் ரயில் நின்றது.

அப்போது, படியிலிருந்து பயணி ஒருவர் செங்கல்பட்டில் தவறி விழுந்தச் சம்பவம் குறித்து ரயில்வே ஊழியர்களுக்கும் போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக ரயில்வே போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தவறி விழுந்த பயணியைத் தண்டவாளத்தில் தேடினர். அப்போது, மயங்கிய நிலையில் ஒருவர் தண்டவாளங்களுக்கு நடுவில் கிடந்தார். உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் போலீஸார் சேர்த்தனர். தற்போது, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. 

 போலீஸார் கூறுகையில், "ரயிலிலிருந்து தவறி விழுந்தவரின் பெயர் காக்கும் பெருமாள். சென்னை பூந்தமல்லியில் கொத்தனார் வேலை செய்துவருகிறார். இவரது சொந்த ஊர் தென்காசி. நண்பர்களுடன் சொந்த ஊருக்குச் செல்ல ரயிலில் சென்றுள்ளார். அப்போதுதான் காக்கும்பெருமாள் தவறி விழுந்துள்ளார். அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்தும் ரயில் நிற்கவில்லை என்று பயணிகள் தெரிவித்துள்ளனர். அதுதொடர்பாக விசாரணை நடத்திவருகிறோம். 
 மேலும், பொதிகை எக்ஸ்பிரஸ் சென்ற பிறகு அவ்வழியாக இன்னும் சில ரயில்கள் சென்றுள்ளன. அதிர்ஷ்டவசமாகத் தண்டவாளத்துக்கு நடுவில் காக்கும்பெருமாள் விழுந்ததால் அவர் உயிர்தப்பியுள்ளார்" என்றனர்.