``அரசுத் திட்டங்களை ஆய்வு செய்யவில்லை; மேற்பார்வையிடுகிறேன்..!'' மு.க.ஸ்டாலினிடம் நேரில் ஆளுநர் விளக்கம் | TN governor Banwarilal Purohit calls opposition leader M.K.Stalin for an urgent meeting

வெளியிடப்பட்ட நேரம்: 19:27 (27/03/2018)

கடைசி தொடர்பு:19:27 (27/03/2018)

``அரசுத் திட்டங்களை ஆய்வு செய்யவில்லை; மேற்பார்வையிடுகிறேன்..!'' மு.க.ஸ்டாலினிடம் நேரில் ஆளுநர் விளக்கம்

 ஸ்டாலின் பன்வாரிலால்

தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், இன்று மாலை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு வந்தார். ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அழைப்பை ஏற்று அவரை ஆளுநர் மாளிகையில் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். அப்போது, துரைமுருகனும் சென்றிருந்தார். சந்திப்பு முடிந்த பிறகு, நிருபர்களை மு.க.ஸ்டாலின் சந்தித்தார்.

 அப்போது மு.க. ஸ்டாலின், ``தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தராக சூரிய நாராயண சாஸ்திரி நியமனம் குறித்து தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. நானும் எதிர்ப்பு தெரிவித்தேன். இதுகுறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித்-க்குக் கடிதம் எழுதினேன். அதனை ஏற்று, அவர் என்னை நேரில் அழைத்தார். இந்தச் சந்திப்பின் போது, 'சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமத்திற்கு பாலு, டேவிட், சூரியநாராயண சாஸ்திரி என்று மூன்று பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. அதிலிருந்து சூரிய நாராயண சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார். உரிய விதிகளின் படிதான் அந்த நியமனம் நடந்தது' என்றார்.

மு.க.ஸ்டாலின்

அதற்கு நான், அவர் மீது ஏற்கெனவே ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததே என்று கேள்வி எழுப்பினேன். அந்த ஒழுங்கு நடவடிக்கை குறித்து ஒரு கமிட்டி அமைத்து அந்தப் பிரச்னைகளை ஆய்வு செய்து அவை தள்ளுபடி செய்யப்பட்ட பின்னர்தான், அவரைத் துணைவேந்தராக நியமித்தேன். இதில் சட்ட மீறில் எதுவும் நடக்கவில்லை என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் விளக்கம் தந்தார். இந்தப் பிரச்னையில் அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து உரிய ஆலோசனைக்குப் பின்னர் உங்களுக்குத் தெரிவிக்கப்படும்.

இதையடுத்து நான் அவரிடம், ` ஒரு அரசு,  தமிழ்நாட்டை ஆளும் போது நீங்கள் மாவட்டம் வாரியாக ஆய்வு செய்வது சரியல்ல. இது மாநில சுயாட்சியில் தலையிடுவது போல் இருக்கிறது' என்று சொன்னேன். அதற்கு அவர், 'ஆய்வுப் பணிகளைச் செய்யவில்லை. வளர்ச்சிப் பணிகளை மேற்பார்வையிட்டேன்' என்று மழுப்பலாக பதில் சொன்னார். அதற்கு நான், உங்கள் செயல் மாநில சுயாட்சிக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் உள்ளது என்று திரும்பவும் எடுத்துச் சொன்னன். அதுபற்றி பரிசீலனை செய்யலாம் என்று பதில் சொன்னார். இந்த விஷயங்கள் குறித்துதான் ஆளுநரிடம் பேசினேன். எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் ஆளுநருக்கு நான் கடிதம் எழுதினேன். அதை மதித்து நேரில் அழைத்து விளக்கம் அளித்த ஆளுநரின் செயல் பாராட்டுக்குரியது'' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close