`மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு' - காவிரி வழக்கில் தமிழக அரசு புதிய முடிவு! | tamilnadu government decides to file a Court disrespect case against central government 

வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (27/03/2018)

கடைசி தொடர்பு:21:40 (27/03/2018)

`மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு' - காவிரி வழக்கில் தமிழக அரசு புதிய முடிவு!

வரும் 29-ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 

தமிழகம் - கர்நாடகம் இடையேயான காவிரி பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கடந்த மாதம் 16-ம் தேதி இறுதித் தீர்ப்பை வழங்கியது உச்ச நீதிமன்றம். அதில், ``காவிரி நீர் யாருக்கும் உரிமை இல்லை. தமிழகத்தின் நீண்ட நாள் கோரிக்கையான  6 வார காலத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் உள்ளிட்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன". இதனையடுத்து நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்திலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன் அதனை பிரதமரிடம் கொடுப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. ஆனால், அதற்கு பிரதமர் அலுவலகம் மறுப்பு தெரிவிக்கவே, அந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. எனினும் எதிர்க்கட்சிகளும், ஆளும் கட்சியும் இதுதொடர்பாக தங்களது போராட்டத்தை முன்னெடுத்து வரும் நிலையில், மேலாண்மை வாரியத்துக்கு பதிலாக, 9 பேர் கொண்ட குழு ஒன்றை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில், உச்ச நீதிமன்றம் விதித்த 6 வார காலக்கெடு நாளை மறுநாளுடன் முடிவடைகிறது. இதனால், மேலாண் வாரியத்தை மத்திய அரசு அமைக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அவ்வாறு அமைக்காவிடில், மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. டெல்லியில் நடந்த மூத்த வழக்கறிஞர்கள் அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் சனிக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசுக்கு மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்தே பரிந்துரைத்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க