வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (27/03/2018)

கடைசி தொடர்பு:22:01 (27/03/2018)

காவல்துறை வீரர்களுடன் பாக்நீரிணையை நீந்திக் கடந்து சாதனை படைத்த ஏ.டி.ஜி.பி சைலேந்திரபாபு!

தமிழக ரயில்வே காவல் துறை ஏ.டி.ஜி.பி சைலேந்திரபாபு தலைமையிலான காவல்துறை நீச்சல் வீரர்கள் 10 பேர் இன்று தலைமன்னார் - தனுஷ்கோடி இடையிலான பாக்நீரிணைப் பகுதியை நீந்திக் கடந்தனர்.

பாக்நீரிணை பகுதியை நீந்தி கடந்த சைலேந்திரபாபு குழுவினர்.
 

தலைமன்னார் - தனுஷ்கோடி இடையிலான பாக்நீரிணைப் பகுதி 32 கி.மீட்டர் தூரம் கொண்டதாகும்.  உலகில் உள்ள முக்கியக் கடல் கால்வாய்களில் நடைபெறுவது போல் பாக்நீரிணைப் பகுதியிலும் நீச்சல் சாதனைகள் செய்வது வழக்கமாகி வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பாக் நீரிணையில் 3 நீச்சல் சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. கடந்த 24-ம் தேதி சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ராஜேஷ்வரபிரபுவும், 25-ம் தேதி ஆந்திர மாநில தலைமை காவலர் துளசி சைதன்யாவும் பாக் நீரிணை கடல் பகுதியினை நீந்திக் கடந்து சாதனை படைத்தனர்.

இந்நிலையில் இன்று தமிழக ரயில்வே காவல் துறை ஏ.டி.ஜி.பி சைலேந்திரபாபு தலைமையில் காவல்துறையைச் சேர்ந்த 10 பேர் தலைமன்னார் - தனுஷ்கோடி இடையிலான பாக்நீரிணை கடற்பகுதில் 28.5 கி.மீ தூரத்தினை 12.14 மணி நேரத்தில் நீந்திக் கடந்தனர். இன்று அதிகாலை 1.30 மணிக்குத் தலைமன்னார் அருகே உள்ள ஊர்மலை என்ற பகுதியிலிருந்து நீந்தத் தொடங்கிய, இவர்கள் இன்று பகல் 1.44 மணிக்கு தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை பகுதியை வந்தடைந்தனர். 56 வயதில் பாக்நீரிணை கடல் பரப்பை நீந்திக் கடந்த சைலேந்திரபாபு மற்றும் அவருடன் நீந்திய நீச்சல் வீரர்களையும் மாவட்ட ஆட்சியர் நடராஜன், கடற்படை கமாண்டர் தினேஷ்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா, டி.எஸ்.பி மகேஷ் உள்ளிட்டோர் பாராட்டி வரவேற்றனர்.

காவல்துறையைச் சேர்ந்த இளைஞர்களுடன் நீந்தி சாதனை செய்த ஏ.டி.ஜி.பி சைலேந்திரபாபு செய்தியாளர்களிடம் பேசுகையில், ``தலைமன்னார் ஊர்மலை பகுதியிலிருந்து நீந்தத் தொடங்கினோம். கடலில் காற்று வேகம் அதிகமாக இருந்தது. என்னுடன் பாக் நீரிணையினை கடந்து சாதனை படைத்தவர்கள் தமிழ்நாடு காவல்துறையின் நீச்சல் வீரர்கள். பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பதக்கங்கள் பெற்றவர்கள். குழுவாக நீந்தி இந்தச் சாதனையைப் படைத்திருப்பது இதுதான் முதல்முறை. 56 வயது உடைய என்னால்தான் மற்றவர்களும் இந்தத் தூரத்தினை கடக்க இவ்வளவு நேரத்தினை எடுத்துக்கொண்டனர். நீச்சலின் போது கடல் ஜெல்லி மற்றும் கடல் பாம்புகளும் தென்பட்டன. நீண்ட கால முயற்சி இது. இதனை சாதித்தது குறித்து பெருமையாக உள்ளது. இந்தச் சாதனை படைக்க உதவிய மத்திய, மாநில அரசுகள், காவல் துறை தலைவர், அரசு அதிகாரிகள் அனைவருக்கும் எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள் இனி வரும் காலங்களில் மற்ற கடல் பரப்பினையும் நீந்திக் கடக்க முயற்சி மேற்கொள்வோம்'' என்றார்.