வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (27/03/2018)

கடைசி தொடர்பு:15:03 (09/07/2018)

`பா.ஜ.கவினர் திட்டமிட்டே தாக்குகின்றனர்!’ - கரூரில் பொங்கிய அய்யாக்கண்ணு

"நாங்க எங்கேயும் 'பா.ஜ.க ஒழிக,மோடி ஒழிக''ன்னு கோஷம் போடலை. ஆனால்,பா.ஜ.ககாரங்க எங்களை தாக்குறாங்க. எங்களை தாக்கிட்டு,அவங்க போய் மருத்துவமனையில் படுத்துக்குறாங்க. ஆனால்,நாங்க பதிலுக்குத் தாக்க மாட்டோம். காந்திய வழியையே கடைப்பிடிப்போம்" என்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு பேசினார்.

'மரபணு மாற்றப்பட்ட விதைகளை அனுமதிக்கக்கூடாது,ரசாயன உரங்களுக்கு தடை விதிக்க வேண்டும்' உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறூ மாவட்ட கலெக்டர்களிடம் மனு அளிக்கவும், அதுதொடர்பான விழிப்புஉணர்வை ஒவ்வொரு மாவட்ட மக்களிடம் ஏற்படுத்தவும் அய்யாக்கண்ணு தலைமையில் அந்த சங்கத்தை சேர்ந்தவர்கள் விழ்ப்புணர்வு பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் 10-வது மாவட்டமாக கரூர் வந்த அவர் கலெக்டர் அன்பழகனிடம் மனு அளித்தார். 

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழக நலன் சார்ந்த விஷயங்களாக இருக்கும், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது, தமிழக நதிகளில் தடுப்பணை அமைப்பது போன்ற பணிகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். உச்சநீதிமன்றம் 6 வார காலத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் அமைக்காமல் இருப்பது உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். அதேபோல், ஆண்களையும், பெண்களையும் மலடாக்கும் மரபணு மாற்றம் செய்த விதைகளை மத்திய அரசு தடை செய்ய வேண்டும். இயற்கை வேண்மை காப்பாற்றப்பட வேண்டும். அலுமினியம் ஆக்ஸைடு கலந்த உப்பைச் சாப்பிட்டு 10 வயதிலேயே சிறுவர்களுக்கு சர்க்கரை நோய் வருகிறது; 8 வயதிலேயே சிறுமிகள் பூப்பெய்துகிறார்கள். மரபணு மாற்றப்பட்ட விதைகளில் விளைந்த உணவு தானியங்களை சாப்பிட்டு வளரும் ஜெர்சி உள்ளிட்ட கலப்பின மாடுகளின் பாலை அருந்தி பலருக்கும் மலட்டுத்தன்மை ஏற்பட்டுவிட்டது. இதனால்,அவர்கள் டெஸ்ட்டியூப் முறையில் குழந்தைகள் பெறுகிறார்கள். அதனால், ஆண்டுக்கு பத்து லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான மாத்திரைகளை விற்று லாபம் பார்க்கின்றன கார்ப்பரேட் கம்பெனிகள். இதனை பிரதமர் மோடி மக்களின் நலன் கருதி தடுத்து நிறுத்த வேண்டும். 

அதேபோல் கெயில் திட்டம், மீத்தேன் எரிவாயு திட்டம், நியூட்ரினோ திட்டங்களைத் தமிழகத்தில் செயல்படுத்தக் கூடாது. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 10-வது மாவட்டமாக கரூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தோம். தமிழகத்தில் மீதம் உள்ள மாவட்ட ஆட்சியர்களை சந்தித்து மனு அளிக்க உள்ளோம். தொடர்ந்து, மக்களுக்கு எதிரான திட்டங்களை மத்திய அரசு மேற்கொண்டு வருவதால்தான்,அண்மைகாலமாக நடைபெற்று வரும் இடைத்தேர்தல்களில் பா.ஜ.க. தோல்வியடைந்து வருகிறது. இதேபோல், தமிழகத்தின் நலன்களுக்கு எதிராக மத்திய அரசு செயல்பட்டால், வரும் தேர்தலில் மோடி அரசை மக்கள் தூக்கி எறிவார்கள். நாங்க எங்கேயும்,,'பா.ஜ.க ஒழிக; மோடி ஒழிக' என்று கோஷம் போடவில்லை. ஆனால்,பா.ஜ.கவினர் எங்களை திட்டமிட்டே தாக்குகிறார்கள். எங்களை அவர்கள் தாக்கிவிட்டு, எங்களுக்கு முன்னரே போய் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு நாடகமாடுகிறார்கள். பதிலுக்கு நாங்கள் அவர்களை எந்த காலத்திலும் தாக்க மாட்டோம். காந்திய வழியையே பின்பற்றுவோம். விரைவில் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை என்றால், டெல்லி சென்று மீண்டும் போராட்டம் நடத்துவோம்" என்றார்.