சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க முன்னாள் துணைவேந்தர்கள் மீது நடவடிக்கை!

பேராசிரியர்கள் நியமனத்தில் ஊழல் நடைபெற்றதாக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ராஜாராம் மீதும், வெளிநாட்டு மாணவர்கள் சேர்க்கைக்கான ஒதுக்கீட்டில் முறைகேடாக ஈடுபட்டதாக சட்டப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வணங்காமுடியின் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவுசெய்துள்ளது. 

துணைவேந்தர்

கடந்த மாதம் பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கணபதி, ஏற்கெனவே பணியில் சேர்ந்த உதவிப் பேராசிரியரிடம் பணி நிரந்தரம் செய்ய பணம் பெற்ற வழக்கில் பிடிபட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் நியமனத்தில் பணம் பெற்றது தொடர்பாக, அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ராஜாராமின் வீடுகளிலும், அவருக்குச் சொந்தமான இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையிட்டுள்ளனர். இதில் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும், ராஜாராமின் மீதும் அவருக்கு உடந்தையாக இருந்த ஆறு பேரின் மீதும் வழக்கும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. 

இதைப்போலவே, சட்டப் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் சேர்க்கைக்கான ஒதுக்கீட்டில் முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சட்டப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வணங்காமுடியின் வீடுகளிலும் இதர இடங்களிலும் சோதனை நடந்துள்ளது. இதில் 95 லட்சம் ரூபாயும், பல ஆவணங்களும் கைப்பற்றியுள்ள லஞ்ச ஒழிப்புத் துறை, வழக்கும் பதிவுசெய்துள்ளது. 

2013-ம் ஆண்டு மே மாதம் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ராஜாராம் நியமிக்கப்பட்டார். 2016-ம் ஆண்டு துணைவேந்தர் பணியிலிருந்து பேராசிரியர் பணிக்குத் திரும்பாமல் விருப்ப ஓய்வுபெற்றுவிட்டார். இவரது நிறுவனத்தின் சார்பில் தேனிக்கும் சென்னைக்கும் சொகுசுப் பேருந்துகளை இயக்கிவருவதாகவும் சொல்லப்படுகிறது.

அண்ணா பல்கலை. துணைவேந்தர்

அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பதவி பெறுவதற்கு முன்னர், திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக 2010-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை இருந்தார். நான்கு அண்ணா பல்கலைக்கழகங்களையும் ஒன்றாக இணைத்த பிறகு அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் பணிநியமன ஆணையைப் பெற்றார். தி.மு.க அரசால் திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டவர், அ.இ.அ.தி.மு.க ஆட்சியிலும் துணைவேந்தராக இருந்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தினர். இவர், துணைவேந்தர் பதவிக்கு 40 கோடி ரூபாய் வரை கொடுத்து பதவி பெற்றதாகவும் பேச்சு இருந்தது. பெருந்தொகை கொடுத்து துணைவேந்தர் பணிக்கு வந்ததால், பல்வேறு நியமனங்களின் மூலம் பல கோடி ரூபாய் பெற்றதாகவும் இவர் மீது புகார் சொல்லப்பட்டது. 

அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக 2013-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நியமிக்கப்பட்ட வணங்காமுடி, 2016-ம் ஆண்டு ஓய்வுபெற்றார். இவர் பதவிவகித்த மூன்று வருடங்களிலும் இளநிலை மாணவர்கள் சேர்க்கையில் வெளிநாட்டு மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில் முறைகேட்டில் ஈடுபட்டிருக்கிறார் என்றும், அதற்குத் துணையாக இருந்த ஐந்து பேராசிரியர்கள் மீதும் வழக்குப் பதிவுசெய்துள்ளனர். 

விரைவில் முன்னாள் துணைவேந்தர்கள் இருவரிடமும் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்தவுள்ளது. 'இவர்கள் பணியிலிருந்து விடுபட்டு இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், இது காலம் கடந்த நடவடிக்கை' என்றும், 'இனிமேலாவது உயர்கல்வியில் உயர் பொறுப்புக்கு வருகிறவர்கள் ஊழலில் ஈடுபடாமல் தமிழ்நாட்டின் உயர்கல்வியின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்துபவராக இருக்க வேண்டும்' என்றும் கோரிக்கையை முன்வைக்கின்றனர் அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர்கள்.

இந்த நிலையில் கடந்த வாரம் சட்டப் பல்கலைக்கழகத்துக்குப் புதிய துணைவேந்தராக தம்ம சூரிய நாராயண சாஸ்திரி நியமிக்கப்பட்டார். இது சர்ச்சையைக் கிளப்பியது. அடுத்த வாரம் அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தரை நியமிக்க நேர்காணல் நடக்கவிருக்கிறது. இங்கும் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவரை நியமிக்க வாய்ப்பு இருப்பதாக பேச்சு அடிபடுகிறது. இந்த நிலையில் எதிர்ப்புகளைச் சமாளிக்கவே முன்னாள் துணைவேந்தர்கள் மீது லஞ்ச ஒழிப்புத் துறையின் மூலம் நடவடிக்கை பாய்ந்திருப்பதாகவும் சொல்கின்றனர் பேராசிரியர்கள். 

மேற்கண்ட நடவடிக்கையின் மூலம் உயர்கல்வித் துறை மீதான களங்கம் துடைக்கப்பட்டால் சரி!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!