`அம்பேத்கர் சிலை அகற்றப்பட்டது ஏன்?’  - கொந்தளிக்கும் இளைஞர்கள்

அரசு அனுமதியின்றி அமைக்கப்பட்ட அம்பேத்கர் சிலை காவல் துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளின் முன்னிலையில் அதிரடியாக அகற்றப்பட்டதால், ஒரு கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.  

அகற்றப்பட்ட அம்பேத்கர் சிலை

கிருஷ்ணமூர்த்திநாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகில், காளஹஸ்தினாபுரம் மெயின்ரோடு ஓரத்தில் அம்பேத்கர் சிலை அமைக்கும் பணியில் அந்த கிராமத்தைச் சேர்ந்த சிலர் ஈடுபட்டனர். அனுமதியின்றி சிலை அமைக்கக் கூடாது என்று அரசு தரப்பில் தடை போடப்பட்டது. மயிலாடுதுறை ஆர்.டி.ஓ தேன்மொழி, நாகை எஸ்.பி., சேகர் தேஷ்முக், தாசில்தார் முருகேசன் மற்றும் அதிகாரிகள் அவ்விடத்தில் கூடினார்கள். அரசு அனுமதியின்றி சிலை வைத்தது தவறு என்று கூறி, பொக்லைன் இயந்திரம்மூலம் அம்பேத்கர் சிலையை அகற்றி, தரங்கம்பாடி தாசில்தார் அலுவலகத்திற்குக் கொண்டுசென்றனர்.  

இதுபற்றி காளஹஸ்தினாபுரம் அம்பேத்கர் காலனியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தியிடம் பேசியபோது, ``எங்களுக்காக பேருந்து நிலையம் கட்டி 20 வருடங்களாகிவிட்டது. அவ்விடத்தில் ஒரு பேருந்தும் நிற்பதில்லை. அதுபோல, சமூதாயக்கூடம் கட்டி 3 வருடங்கள் ஆகிறது. இதுவரை திறக்கப்படவே இல்லை. இவையெல்லாம் எங்கள் மக்களுக்கு பயன்படவே இல்லை. இதற்கெல்லாம் ஓடி வராத அரசு நிர்வாகம், எங்கள் ஊரில் உள்ள படிக்கிற புள்ளைங்க சேமித்துவைத்த பணத்தைக்கொண்டு ரூ.20 ஆயிரம் செலவுசெய்து அம்பேத்கர் சிலை வைக்க ஆசைப்பட்டாங்க. அதற்கு, அரசு அனுமதி கோரி ஏற்பாடுகளும் செய்தோம். ஆனால், மாவட்டத்தில் உள்ள அனைத்து அதிகாரிகளும் ஓடோடி வந்து, சிலையை அகற்றுவதிலேயே குறிக்கோளாக இருந்து சிலையை எடுத்திட்டுப் போயிட்டாங்க.  சிலை அமைந்த பீடத்தைக்கூட இரவோடு இரவாக இடித்துத் தள்ளிட்டாங்க. இது எந்தவகையில் நியாயம் என்று தெரியவில்லை” என்றார்.  

Ambethkar Stature Kaviarasanஇளைஞர் நற்பணி மன்ற துணைத் தலைவர் கவியரசன் கூறுகையில், ``கடந்த 17 ஆண்டுகளாக முறைப்படி பதிவுசெய்துதான் எங்கள் மன்றம் இயங்கிவருகிறது. படித்த இளைஞர்களைக்கொண்ட நாங்கள், ஊருக்கு நல்லது மட்டுமே செய்கிறோம். இதே ஊரில் பெரும்பான்மை சமூகமாக உள்ள மாற்று சமூகத்தினரிடம் ஒற்றுமையாக வாழ்கிறோம். ஜாதிப் பிரச்னை என்பது எங்கள் ஊரில் அறவே இல்லை. எல்லோரது விருப்பப்படி, படிக்கும் மாணவர்கள் சேமித்துவைத்த பணத்தைக்கொண்டு அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலையை வைக்க ஆசைப்பட்டோம்.  இதே ஊரில் எம்.ஜி.ஆர் சிலை இருக்கு, எல்லா கட்சிகளின் கொடி மரங்கள் இருக்கு. ஆனால், எந்தக் கட்சியையும் சாராத நாட்டுக்கு நல்லதை மட்டுமே சிந்தித்த அம்பேத்கர் சிலையை வைக்க நாங்கள் ஆசைப்பட்டோம். இளைஞர்கள் செய்வது ஏதோ பெரிய குற்றமெனக் கருதி, அரசு அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை எங்களுக்கு பெரிய வருத்தத்தைத் தருகிறது. ஜாதிப் பிரிவினை இல்லாமல் ஒற்றுமையுடன் வாழும் கிராமத்தை அரசு அதிகாரிகளே துண்டாடச் செய்வது பெரும் வருத்தமாக இருக்கிறது.  மீண்டும், முறைப்படி அம்பேத்கர் சிலை அமைக்க அரசு அனுமதிபெற விண்ணப்பிக்க உள்ளோம். அதன்பிறகு என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்” என்று முடித்தார்.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!