'பறவைகளின் ரட்சகர்களாக மாறிய அரசுப் பள்ளி மாணவர்கள்' - கரூர் அருகே விநோதம்!

'மாணவர்களுக்கு கல்வி போதிப்பது என்பது வெறும் பாடப் புத்தகங்களில் இருக்கும் பாடங்கள் மட்டுமல்ல; வாழ்வியல், சூழலியல் சம்பந்தமான படிப்பினைகளையும் அவர்களுக்குக் கற்பிப்பது அவசியம்' என்பார்கள். அதை உணர்ந்ததாலோ என்னவோ, கரூர் மாவட்டம் தான்தோன்றிமலை ஒன்றியத்தில் உள்ள வெள்ளியணையில் இருக்கும் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, பல்வேறு சூழலியல் சார்ந்த விஷயங்களில் மாணவர்களைத் தொடர்ந்து ஈடுபட வைக்கிறது.

 மாணவர்கள்

பள்ளி வளாகம் மட்டுமின்றி, கிராமம் முழுக்க மரக்கன்றுகள் வைப்பவர்களின் பெயர்களை வைத்து மரக்கன்றுகள் நட வைப்பது, பள்ளி வளாகத்தில் இயற்கைக் காய்கறித் தோட்டம் அமைப்பது என்று அசத்திவருகிறார்கள். அதோடு, இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தர்மலிங்கத்தின் ஏற்பாட்டில் மாணவர்களைக் கொண்டு விடுமுறை நாள்களில் பிளாஸ்டிக் ஒழிப்பு, சீமைக் கருவேல மரங்கள் ஒழிப்பு சம்பந்தப்பட்ட விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகளை நடத்திவருகிறார்கள். அடுத்த முயற்சியாக, பள்ளி வளாகம் மட்டுமின்று, தாங்கள் வெள்ளியணை முழுக்க நட்டு வளர்த்த மரக்கிளைகளில் மாணவர்களை விட்டே கூடுகளைச் செய்யவைக்கிறார்கள். அதோடு, ஆங்காங்கே பறவைகள் தாகம் தணிக்க ஏதுவாக, மண்குவளைகளில் தண்ணீர் வைக்கிறார்கள்.

 இதுபற்றி, நாம் தலைமை ஆசிரியர் தர்மலிங்கத்திடம் பேசினோம், "எங்கள் மாணவர்களுக்கு, ஏட்டில் உள்ள கல்வியை மட்டும் சொல்லித் தரவில்லை. காட்டில் உள்ள மரங்கள் அழிந்ததால், என்னென்ன பிரச்னைகள் ஏற்படுகின்றன என்பதைச் சொல்லித்தருகிறோம். அதன் பலனாக, எங்கள் மாணவர்கள் இயற்கையைக் காப்பதன் அவசியத்தை உணர்ந்துட்டாங்க.

இங்கே, மரக்கன்றுகள் வைப்பது போக, அவரவர் வீடுகளில் ஆளுக்கு 10 மரக்கன்றுகளை நட்டு வைத்து, கண்ணும்கருத்துமாக காபந்து பண்ணிவருகிறார்கள். கரூர் மாவட்டம், வானம் பார்த்த வறட்சியான மாவட்டம். இங்கு, கோடையில் எங்கும் தண்ணீர் இருக்காது. மனிதர்களுக்குத் தண்ணீர் கிடைப்பதே பெரும் பிரச்னையாக இருக்கும். 

பறவைகளுக்குத் தண்ணீர் குடிக்க வாய்ப்பே இல்லாமல்போகும். கோடைக்காலங்களில், இந்தப் பகுதியில் எந்தப் பறவையையும் பெரிய அளவில் பார்க்க முடியாது. இந்த வருடத்தில், கடந்த 30 வருடங்களுக்கு அப்புறம் வெயில் அதிகமாக இருப்பதாகச் சொல்கிறார்கள்.

அதனால், இந்த வருடம் கரூர் மாவட்டம் கடுமையாக வறண்டு போகப்போகுது. அதனால்தான், மாணவர்களே பறவைகள் தங்க கூடு செஞ்சு வைக்கிறது, அங்கங்கே பறவைகள் அருந்த மண் குவளைகளில் தண்ணீர் வைப்பது என்று, 'பறவைகளின் ரட்சகர்களாக' மாறி இருக்கிறார்கள்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!