வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (27/03/2018)

கடைசி தொடர்பு:09:16 (28/03/2018)

”மாணவர்கள் மத்தியில் பேசக்கூடாது என தடைகள் விதிக்கப்படுகின்றன” -கமல்ஹாசன் பேச்சு

''நான், மாணவர்கள் மத்தியில் பேசக் கூடாது எனப்  பல தடைகள் விதிக்கப்படுகின்றன'' என  தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பேசினார். 

கமல்ஹாசன்

திருவள்ளூரைஅடுத்த பொன்னேரியில், தனியார் கல்லூரி ஒன்றில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், மாணவர்கள் மத்தியில் பேசினார். அப்போது, “மாணவர்கள் படித்து முடித்துவிட்டு எங்கே செல்லப்போகிறார்கள் என்ற சந்தேகம் பெற்றோருக்கும், பேராசிரியர்களுக்கும்  இருக்கக் கூடாது. அதற்கு நாடு மாற வேண்டும். அதை மாற்றும் பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது. 

நான் பல பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் செல்ல விடாமல் சில தடைகள் இருக்கின்றன. மாணவர்களிடையே பேசி, இன்றைய நிலை குறித்து நான் புரியவைத்துவிடுவேனோ என்ற பதற்றம் பலருக்கு இருக்கிறது. அதற்கு நான் இப்படிப் பதில் சொன்னேன். நான் கல்லூரிக்குச் செல்வதை நீங்கள் தடை செய்யலாம். ஆனால், நான் கற்பதை நீங்கள் தடை செய்ய முடியாது. 

மாணவர்கள் படித்து முடித்து வெளியே வரும்போது உங்களை தாக்கப்போவது, அரசியலும் ஊழலும்தான். அதை எதிர்கொள்ள உங்களுக்கு அரசியல் புரிந்திருக்க வேண்டும். உங்களுக்குப்  புரிந்துவிட்டால், அரசியலுக்கு வரும் அரசியல்வாதிகள் நியாயமாக இருப்பதைத்  தவிர வேறு வழி இருக்காது. நீட் விவகாரத்தில் மாணவர்களுக்கு இருக்கும் தெளிவு, மத்தியில் இருப்பவர்களுக்கு இல்லை. சோறு எங்கு இருந்து வருகிறது என்பதைப் பார்த்து, விவசாயிகளை மதிக்க வேண்டும். திராவிடத்தை ஒழிக்க முடியாது. அது ஒரு இனத்தைக் குறிக்கும். திராவிடம் நாடு தழுவியது”  என்றார்.