வெளியிடப்பட்ட நேரம்: 03:15 (28/03/2018)

கடைசி தொடர்பு:07:59 (28/03/2018)

"மக்களின் மேம்பாட்டிற்காக எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்திவருகிறது தமிழக அரசு!" -அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்

          
 எம்.ஆர் விஜயபாஸ்கர்

கரூரில், அரசுத் துறைகள் வாயிலாக நலத்திட்ட உதவிகளைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் தலைமையில் நேற்று (27.03.2018) வழங்கினார்.

கரூர் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் வேளாண்துறை, சமூகநலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, வருவாய்த்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட அரசுத் துறைகள் வாயிலாக நலத்திட்ட உதவிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் தலைமையில் நேற்று வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், "நலத்திட்ட உதவிகள் வழங்குவதில் உலகத்துக்கு வழிகாட்டியாகத்  திகழும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் சிறப்புத் திட்டங்களில் ஒன்றான, படித்த பெண்களின் திருமணத்துக்கு நிதியுதவி மற்றும் திருமாங்கல்யத்துக்கு தங்கம் வழங்கும் திட்டம், கரூர் மாவட்டத்தில் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்மூலம் ஏராளமான படித்த பெண்கள் பயனடைந்துள்ளனர். இதுவரை, படித்த ஏழைப் பெண்களுக்கு ரூ 25,000 நிதியுதவியுடன் 8 கிராம் தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ், 605 பயனாளிகளுக்கு ரூ 1.50 கோடி நிதியுதவியும், ரூபாய் 10.75 கோடி மதிப்பில் 3.42 கிலோ கிராம் தங்கமும் வழங்கப்பட்டுள்ளது. பட்டம் படித்த ஏழைப் பெண்களுக்கு ரூ 50,000 நிதியுதவியுடன் தலா 8 கிராம் தாலிக்குத் தங்கம் திட்டத்தின் கீழ் 1,702 பயனாளிகளுக்கு ரூ 8.51 கோடி நிதியுதவியும், ரூ 3.78 கோடி செலவில் 11.06 கிலோ கிராம் தங்கமும் வழங்கப்பட்டுள்ளது. 

அதைத் தொடர்ந்து, நடப்பாண்டுக்கு இத்திட்டம் இன்று தொடங்கப்படுகிறது. தகுதிவாய்ந்த நபர்கள் விண்ணப்பித்துப் பயன்பெறலாம். இதுபோன்று மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளைத் தமிழக அரசு செயல்படுத்திவருகிறது. இத்திட்டங்களை அறிந்து, கரூர் மாவட்ட மக்கள் பொருளாதார மற்றும் வாழ்வாதார மேம்பாட்டில் சிறந்து விளங்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.