‘காவல்துறையைக் கையில் வைத்துக்கொண்டு எங்களைத் தாக்குகிறார்கள்’ - செந்தில்பாலாஜி குற்றச்சாட்டு!

 செந்தில்பாலாஜி

"கூட்டுறவு சங்கத் தேர்தலில் போட்டியிட, ஜனநாயக முறையில் வேட்புமனு தாக்கல்செய்யப் போன எங்க அமைப்பைச் சேர்ந்தவர்களை ஆளுங்கட்சி ரவுடிகள், காவல்துறையைக் கையில் வைத்துக்கொண்டு கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்" என்றார், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி.

தமிழ்நாடு முழுக்க கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கான அறிவிப்பை தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்டது. நான்கு கட்டமாக நடக்கும் கூட்டுறவு சங்கத் தேர்தலில், முதல்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று நடைபெற்றது. இதில், ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும், டி.டி.வி.தினகரன் அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கும் தமிழ்நாடு முழுக்க ஆங்காங்கே பிரச்னை எழுந்தது.

இந்நிலையில், கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் நடந்த வேட்புமனு தாக்கலின்போது இருதரப்புக்கிடையே கலவரம் வெடித்தது. டி.எஸ்.பி., கும்மராஜா ஜீப் கண்ணாடியை கல் எறிந்து உடைத்தனர். பலருக்கு ரத்தகாயம் ஏற்பட்டது. டி.டி.வி.தினகரன் அணியைச் சேர்ந்த எட்டுப் பேர் கலவரத்தில் ஈடுப்பட்டதாகக் கைது செய்யப்பட்டனர்.


 

இந்த நிலையில், இந்தப் பிரச்னையைக் கண்டித்துப் பேசிய முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, "ஆளுங்கட்சியின் ரவுடிகள்,  காவல்துறையைக் கையில் வைத்துக்கொண்டு, ஜனநாயக முறையில் வேட்புமனு தாக்கல் செய்யச் சென்றவர்களைக் கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளனர். அவர்களின் தாக்குதலுக்கு உள்ளான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு முதலுதவிகூட செய்யாமல், கைதுசெய்து மண்டபத்தில் அடைத்தது காவல்துறை. அதோடு, காவல்துறை ஜீப்பை அவர்களே உடைத்துவிட்டு, பழியை எங்கள் ஆட்கள்மீது போட்டு, கைது செய்திருக்கிறது.

இன்னும் பல இடங்களில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள், 'விண்ணப்பம் இல்லை' என்று அளுங்கட்சியினரைத் தவிர்த்து, மற்றவர்களிடம் சொல்லியுள்ளனர். மேலும், இதுபற்றி புகார் தெரிவிக்கலாம் என்று தொலைபேசி எண்ணை அறிவித்த கூட்டுறவு சங்க தலைமைத் தேர்தல் அதிகாரியோ தொலைபேசியை எடுப்பதில்லை. அப்புறம் எப்படி இந்தத் தேர்தல் நேர்மையாக நடைபெறும். டி.டி.வி.தினகரன் அறிவுறுத்தலோடு இந்தப் பிரச்னையை கோர்ட்டுக்குக் கொண்டுபோக இருக்கிறோம்" என்றார்.

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!