வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (28/03/2018)

கடைசி தொடர்பு:07:03 (28/03/2018)

பிரபல துணிக்கடை கட்டடத்துக்கு சீல் வைத்த திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள்!

திருப்பூர்

திருப்பூரில், விதிகளை மீறி கட்டியதாகக் கூறி, பிரபல துணிக்கடைக்கு திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள் இன்று சீல் வைத்தனர்.
 
திருப்பூரின் மிக முக்கிய வர்த்தக சாலையான குமரன் ரோடு பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி கட்டடத்தில்
தனியார் ஜவுளிக்கடை ஒன்று இயங்கிவந்தது. இந்த ஜவுளிக்கடை கட்டடம், விதிகளை மீறி, அனுமதிக்கப்பட்ட அளவைவிடக் கூடுதலான அமைப்பில் கட்டப்பட்டுள்ளதாகக் கூறி, ராமச்சந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், விதிகளை மீறி கட்டப்பட்ட அந்தக் கட்டடத்துக்கு 24 மணி நேரத்துக்குள் சீல் வைக்க வேண்டுமென்று திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

அதைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவை முன்வைத்து, திருப்பூர் மாநகராட்சி மூன்றாவது மண்டல உதவி ஆணையர் சபியுல்லா தலைமையில் சென்ற அதிகாரிகள் குழு, இன்று சம்பந்தப்பட்ட ஜவுளிக்கடை கட்டடத்துக்கு சீல் வைத்தனர். மேலும், கட்டடத்தின் அனைத்து மின் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டன. உள்ளூர் திட்டக் குழுமத்தால்  அனுமதிக்கப்பட்ட அளவைவிட, கூடுதலாக வாகன 
நிறுத்துமிடம் மற்றும் கட்டடத்தின் முகப்புப் பகுதியில் சாலையை ஆக்கிரமித்திருக்கிறது என்றுகூறி
வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. அந்த வழக்கின் தற்போதைய நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தும் வகையில் சம்பந்தப்பட்ட கட்டடத்துக்கு சீல் வைத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

திருப்பூரின் அதி முக்கிய வர்த்தக சாலைகளான குமரன் சாலை, புது மார்க்கெட் வீதி உள்ளிட்ட பகுதிகளில் பிரபல துணிக்கடைகள், நகைக்கடைகள் என ஏராளமான வர்த்தக நிறுவனங்கள் செயல்பட்டுவருகின்றன. சமீபத்தில் துவங்கப்பட்டு, பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுவந்த இந்தத் துணிக்கடைக்கு மட்டும் சீல் வைத்ததுடன் நிறுத்திக்கொள்ளாமல், இப்பகுதியில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களின் கட்டடங்களையும் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வுசெய்ய வேண்டும் என்ற கோரிக்கை, பொதுமக்கள் தரப்பில் வைக்கப்பட்டுள்ளது.