'பசங்க-2' பட பாணியில் செயல்படும் அரசு உயர்நிலைப் பள்ளி

நேர்மை அங்காடி, நேர்மைக் கண்ணாடி வகுப்புக்கு ஒரு மரம் எனப் பல அசத்தல் விசயங்களுடன் செயல்படும் அரசு உயர்நிலைப் பள்ளி.


அரசு உயர் நிலை பள்ளி


புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார்கோவில் அருகில் உள்ள லெக்கனாப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி, ஓர் அசத்தல் பள்ளியாக உருவெடுத்திருக்கிறது. அரசுப் பணியில் இத்தனை விசயங்களா என்று வியந்துபோகும் வண்ணம், வகுப்பறைத் தூய்மை, மாணவர்கள் ஒழுக்கம், நேர்மை, தன்முனைப்புப் பயிற்சிகள், மரம் வளர்ப்பு, சமுதாய நோக்கு  என்று பல்வேறு முறைமைகள் இங்கு வரிசைகட்டி நிற்கின்றன. இந்தப் பள்ளியைச் சுற்றுவட்டாரத்தில் முன்மாதிரியாக மாற்றியதில் பெரும்பங்கு வகிப்பது, தலைமையாசிரியர் ஆண்டனி. அவரிடம் பேசினோம். ``நான் இந்தப் பள்ளிக்குப் பணிமாறுதலில் வந்து ஓர் ஆண்டு ஆகிறது. இதற்கு முன் அறங்தாங்கியில் பெருங்காடு அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்தேன். அங்கு நான் பணியில் சேரும்போது 179 மாணவர்கள் இருந்தார்கள். அந்த எண்ணிக்கையை 520 ஆக உயர்த்தினேன். அங்கு, பல்வேறு முன்முயற்சிகளை எடுத்து, பள்ளியின் தரத்தை உயர்த்தினேன் அதேபோல, இந்தப் பள்ளியையும்  மாற்றுவதற்கான முயற்சிகளை முன்னெடுத்தேன். மாணவர்களின்  மனதில் நேர்மை எண்ணத்தை வளர்க்கும் நோக்கில் நேர்மை அங்காடியைத் தொடங்கினேன்.

நேர்மை அங்காடியில், மாணவர்களுக்குத் தேவையான பொருள்கள் இருக்கும். அதை மாணவர்கள் எடுத்துக் கொண்டு, அதற்கு உரிய பணத்தை பெட்டியில் போட வேண்டும். ஆரம்பத்தில், இத்திட்டத்தில் பொருள்கள் திருட்டுப் போனது. அதனை, நான் இறை வணக்கத்தின்போது தொடர்ந்து சுட்டிக்காட்டினேன். இப்போது திருட்டுப் போவதில்லை. மாணவர்கள் நேர்மையாகச் செயல்பட ஆரம்பித்துவிட்டார்கள். அடுத்ததாக, நேர்மைக் கண்ணாடி. யாராவது தவறவிட்ட, தொலைத்த பொருள்கள் கீழே இருக்கக் கண்டால், அதை எடுத்து பெட்டியில் போட வேண்டும். இத்திட்டத்தின்மூலம் கீழே கிடக்கும் பொருள்களை அதிகமாக பெட்டியில் போடும் மாணவர்களுக்குப் பரிசு வழங்கிப் பாராட்டுவோம். இதனால், மாணவர்கள்  அடுத்தவங்க பொருள்மீது ஆசைப்படவும் திருடவும் மாட்டாங்க.  அதேபோல 'வார இறுதி விழா' என்று ஒரு நிகழ்ச்சியை நடத்திவருகிறேன். வாரத்தின் முதல் நாளில், போட்டிக்கான தலைப்பைக் கொடுத்துவிடுவேன். வாரத்தின்  கடைசி நாளில், அந்தத் தலைப்பில் பேச வேண்டும். 3 மணி முதல் 4.30 மணி வரை இந்த நிகழ்ச்சி நடைபெறும். இதன் நோக்கம், மாணவர்கள் மனதில் இருக்கும் மேடை பயத்தைப் போக்குவதும் சிந்தனைத் திறனை வளர்ப்பதும்தான். மாணவர்களுக்குப் புத்தகம் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டும் நோக்கில் 600 புத்தகங்கள்கொண்ட ஒரு நூலகம் இந்தப் பள்ளியில் இருக்கிறது.
எந்த வகுப்பறை அமைதியாகவும் சுத்தமாகவும் பிரச்னை இல்லாமலும் இருக்கிறதோ, அந்த வகுப்பறை முன் தங்க நட்சத்திரம் ஒட்டப்படும். எந்த வகுப்பறை அதிக தங்க நட்சத்திரம் பெறுகிறதோ, அந்த வகுப்பாசிரியருக்குப் பரிசுகள் வழங்கப்படும். இதனால் ஆசிரியர்கள் போட்டிபோட்டு செயல்படுவார்கள். அதேபோல, எந்த மாணவர் தினமும் தூய்மையான ஆடை அணிந்து சுத்தமாக வருகிறாரோ அவருக்கு 'ஜென்டில் மேன் விருது' வழங்கப்படும். அந்த விருது பெறும் மாணவனின் புகைப்படம், அவனது வகுப்பறை முன் ஒட்டப்படும். இதனால், எல்லா மாணவர்களும் தன்முனைப்புடன் சுத்தமாக ஆடை அணிந்து வருகிறார்கள். எங்கள் பள்ளியில் மூலிகைத் தோட்டமும் உள்ளது. மரம் வளர்ப்புத் திட்டத்தையும் ஊக்கப்படுத்துகிறோம்

 

 

மாணவர்களுக்கு ஒரு மரம், வகுப்பிற்கு ஒரு மரம், ஆசிரியருக்கு ஒரு மரம் என நட்டு, பராமரிக்கப்பட்டுவருகிறது. நன்றாக வளர்க்கப்படும் மரத்தைப்  பார்வையிட்டு,  மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும்  பரிசு வழங்கப்படுகிறது. அதேபோல, இங்கு நடைபெறும் அறிவியல் கண்காட்சியில் ஆசிரியர்கள் துணையின்றி மாணவர்களே சிறந்த படைப்புகளைத் தேர்வுசெய்து பரிசு வழங்குகிறார்கள். வகுப்பிற்கு இரண்டு மாணவர்கள் தேர்வுசெய்யப்பட்டு, அவர்களிடம் கேள்விகள் கேட்கப்படும். எந்த மாணவன் சிந்தித்துப் பதில் கூறுகிறானோ, அந்த மாணவன், அந்த ஆண்டின் சிறந்த மாணவனாகத் தேர்ந்தெடுக்கப்படுவான்" என்ற ஆண்டனி இன்னும் பல சிறப்புகளைப் பட்டியலிட்டு பிரமிக்க வைத்தார்.


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!