வெளியிடப்பட்ட நேரம்: 10:21 (28/03/2018)

கடைசி தொடர்பு:20:26 (28/03/2018)

50 நாள்கள்... 3000 படங்கள்... 1 வீடியோ... #DearCSK வீடியோ உருவானது எப்படி?

ஐ.பி.எல்-னாலே திருவிழாதான். அதிலும் சி.எஸ்.கே அணி தடைகளைத் தாண்டி இம்முறை களத்திற்கு வருகிறது. அதனாலேயே எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிறிக்கிடக்கிறது. சென்னையில் எங்கெங்கும் திருவிழாக்கோலம்தான். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடவுள்ள தென்னாப்பிரிக்க வீரர் இம்ரான் தாஹிர் போட்ட ஒற்றை தங்கிலீஷ் ட்வீட் `வர்றோம் தட்றோம் தூக்குறோம்' செம வைரல் ஆனது. தோனியை தல-தளபதி-காலா வெர்ஷன்களில் 'வெல்கம் பொக்கே' கொடுத்து பலர் தங்கள் முகநூல் பக்கத்தை பிஸியாக்கினர். `CSK Returns Anthem’ எல்லாம் தூள் பறக்கிறது.  லேட்டஸ்ட்டாய் இன்று இணையத்தில்  எங்கெங்கும் காணினும் 'டியர் சி.எஸ்.கே' வீடியோதான். சோஷியல் மீடியாவில் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வரும் இந்த வீடியோவை  'Fully' என்ற யூ-டியூப் சேனல் உருவாக்கியுள்ளது.

காவ்யா``சி.எஸ்.கே ரிட்டர்ன்ஸ். கெத்தா வந்தாச்சு. ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பின் திரும்பியுள்ள, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு செம வார்ம் வெல்கம் கொடுத்து ஆளாளுக்கு மீம்ஸ், வீடியோக்கள் என பட்டையைக் கிளப்பி வருகிறார்கள். எங்கள் Fully filmy யூ டியூப் சேனலை 'Fully' என்று மாற்றி, புதுப்புது கான்செப்ட்டோடு பல ஏரியாக்களில் பண்ணலாம் என களம் இறங்கியிருக்கிறோம். இந்த Dear CSK வீடியோ இந்த அளவுக்கு வைரல் ஆகும் என நாங்கள் நினைக்கவில்லை. இணையத்தில் வெளியான 24 மணிநேரத்தில் 5,28,283 பேர் பார்த்திருக்கிறார்கள். பரபரவென சமூக வலைதளங்களில் ஷேர் செய்தும் வருகிறார்கள். இத்தனைக்கும் நடிகர்கள் யாரும் இல்லாமல் வெறும் ஸ்கிரிப்ட்டை மூலதனமாக வைத்து அழகழகான, கைகளால் வரையப்பட்ட  3,000 படங்களை மட்டுமே வைத்து 50 நாள்களில் இந்த வீடியோவை உருவாக்கி இருக்கிறோம்.'' என்கிறார் குரல் கொடுத்திருக்கும் காவ்யா.

 `ஃபுல்லி' டீமின் சி.இ.ஓ-வான ரௌனக் மாங்கொட்டில் தான் இதை இயக்கி இருக்கிறார். கிரிக்கெட்டை ஒரு பெண்ணின் பார்வையில் பேசியிருப்பதோடு அதன் வழியே பெண்களின் ஏக்கத்தையும் பதிவு செய்திருப்பதுதான் இது நம்பர் -1ஆக இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருப்பதற்கான காரணம். கல்லூரி பெண்கள் தான் அதிகம் ஷேர் செய்திருக்கிறார்கள்.

 'ஃபுல்லி ஃபிலிமி' டீமின்  ஓவியர் நஜீபின் ஓவியங்களை வைத்து இந்த வீடியோவை உருவாக்கி இருக்கிறார்கள். இந்த வீடியோவை ரௌனக்அழகாக எடிட் செய்திருக்கிறார் அந்த டீமின் எடிட்டர் பாலாஜி ஆறுமுகம்.  ஒரு பெண்ணின் பார்வையில் இது இருந்தால் நன்றாக இருக்கும் என இந்த டீமின் சோஷியல் மீடியா அனலைஸ்ட் மீராவோடு சேர்ந்து ஸ்கிரிப்பட்டை எழுதியது டைரக்டர் ரௌனக். 

``முதலில் சி.எஸ்.கேவுக்கான வீடியோவாக இதைப் பண்ண நாங்கள் யோசிக்கவில்லை.  பெண்களுக்கு எதிரான வன்முறையைப் பற்றிய ஒரு வீடியோவுக்காக கான்செப்ட் யோசித்துக் கொண்டிருந்தோம். அப்போதுதான் சி.எஸ்.கே அணி மீண்டும் ஐ.பி.எல்லுக்குள் வந்திருந்த தகவலைப் பேசிக் கொண்டிருந்தோம். எங்கள் மனதில் கிரிக்கெட் விதை விழுந்தது.  ஒரு கிரிக்கெட் கேம் எப்படி நம் வாழ்க்கையை ரசனைக்குரியதாக மாற்றுகிறது என்பதை ஒரு பெண்ணின் பார்வையில் காட்சிப்படுத்தினால் என்ன என்று தோன்றியது. இயல்பாகவே பெண்களுக்கு விளையாட்டின் மீது இருக்கும் ஏக்கத்தையும் இதில் பதிவு செய்தோம். 'பசங்க' என்று கிடைக்கும் சலுகையும், 'பொண்ணுங்க' என மறுக்கப்படும் உரிமையையும் மையமாக வைத்துதான் ஸ்கிரிப்ட் எழுதியிருந்தோம். செமையாய் ஒர்க்-அவுட் ஆகிவிட்டது!'' என்கிறார் இந்த 7 நிமிட வீடியோவின் இயக்குநர் ரௌனக்.

'நோ பிங்க்... நோ ப்ளூ... ஒன்லி எல்லோ!',  'CSK is not a cricket team its a way of life!' என பெண்ணியத்தையும்- சென்னை சூப்பர் கிங்ஸின் பெருமையையும் அழுத்தம் திருத்தமாய் ஒரே புள்ளியில் இணைத்ததற்காய் இந்த டீமை தாராளமாகப் பாராட்டலாம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்