நடுரோட்டில் விமான நிலைய ஊழியரால் காதலிக்கு நேர்ந்த துயரம்  

காதலன்

 பல்லாவரத்தில், காதலிமீது ஏற்பட்ட சந்தேகத்தால் அவரை கத்தியால் குத்திய காதலனை போலீஸார் கைதுசெய்தனர். 

சென்னையை அடுத்த பல்லாவரத்தைச் சேர்ந்தவர், பிரகாஷ். இவர் சென்னை விமான நிலையத்தில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றுகிறார். இவருக்கும் திருச்சியைச் சேர்ந்த இந்து என்கிற பெண்ணுக்கும் நட்பு ஏற்பட்டது. இந்து மீது பிரகாஷுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. 

 இந்த நிலையில், இந்துவை பல்லாவரத்தில் உள்ள பூங்காவுக்கு வரும்படி அழைத்துள்ளார் பிரகாஷ். அங்கு இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது, இந்துவிடமிருந்த செல்போனைப் பிடுங்கி கால்களைச் 'செக்' பண்ணியுள்ளார் பிரகாஷ். அதனால், இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பிரகாஷ், இந்துவை பிளேடால் கிழித்துள்ளார். இந்துவின் அலறல் சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள் அங்கு திரண்டு வந்தனர். இதைப் பார்த்த பிரகாஷ், அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதையடுத்து, இந்துவை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இதற்கிடையில், தப்பி ஓடிய பிரகாஷை பல்லாவரம் போலீஸார் கைதுசெய்து விசாரித்துவருகின்றனர். விசாரணையில், இந்து மீது ஏற்பட்ட சந்தேகத்தால், அவரை கத்தியால் குத்தியதாகத் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "பிரகாஷும் இந்துவும் காதலித்துள்ளனர். இந்துமீது ஏற்பட்ட சந்தேகத்தால், அவரை பிளேடால் கிழித்துள்ளார் பிரகாஷ். அப்போது அங்குத் திரண்ட பொதுமக்களால் இந்து காப்பாற்றப்பட்டுவிட்டார். இல்லையென்றால், அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும். இந்துவை கொலை செய்ய முயன்ற குற்றத்துக்காக பிரகாஷை  கைதுசெய்துள்ளோம்" என்றனர்

இந்தச் சம்பவம், பல்லாவரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!